அவதூறு பரப்பியதாக முன்னாள் மனைவி மீது நடிகர் ஜானிடெப் ரூ.335 கோடி கேட்டு வழக்கு


அவதூறு பரப்பியதாக முன்னாள் மனைவி மீது நடிகர் ஜானிடெப் ரூ.335 கோடி கேட்டு வழக்கு
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு பரப்பியதாக முன்னாள் மனைவி மீது நடிகர் ஜானிடெப் ரூ.335 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.


‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களின் பல பாகங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானிடெப். டெட்மேன், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம்ஹெல், சீக்ரெட் விண்டோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படங்களில் 15 வருடங்களாக நடித்து வந்த ஜானிடெப் இனிமேல் அந்த படங்களில் நடிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது 55 வயது ஆகிறது. ஜானிடெப் 1983-ல் லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015-ல் மணந்தார். இந்த திருமணமும் 2 வருடத்தில் முறிந்தது. 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

சமீபத்தில் ஜானிடெப் மீது அம்பெர் ஹெர்ட் அமெரிக்க பத்திரிகையில் கடுமையாக விமர்சித்து அவதூறாக கருத்து தெரிவித்து இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனாலேயே பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அம்பெர் ஹெர்ட் தனது புகழை கெடுக்கும் நோக்கில் அவதூறுகளை பரப்பியதாகவும் இதன் காரணமாகவே தன்னை பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் ஜானிடெப் குற்றம் சாட்டினார். இதற்காக அம்பெர் ஹெர்ட் தனக்கு ரூ.355 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Next Story