உலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாகிறது
உலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவத்தினர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்திய விமான படையினர் குண்டு வீசி அழித்து தரைமட்டம் ஆக்கினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்ற விமானங்களை இந்திய விமான படை வீரர் அபிநந்தன் துரத்தியபோது பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். அப்போது அவரது விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுடப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
பின்னர் உலக நாடுகளின் அழுத்ததால் அவரை பாகிஸ்தான் விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. புல்வாமா தாக்குதலில் இருந்து அபிநந்தனை விடுவித்தது வரை உள்ள சம்பவங்கள் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்ததால் அதை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை எடுக்கின்றனர். இதில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. அக்ஷய்குமார், சல்மான்கான், அமீர்கான், ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். இந்த படத்துக்கு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0’ என்ற பெயர் உள்பட பல பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தமிழிலும் அபிநந்தன் சம்பவத்தை படமாக்க முயற்சி நடக்கிறது.
Related Tags :
Next Story