சினிமா செய்திகள்

அண்ணாவின் கொள்கைகளை கடைபிடித்தால் அரசியலில் பகை இருக்காது; தமிழாற்றுப்படை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேச்சு + "||" + If you follow Anna policies, there will be no political hatred; Vairamuthu

அண்ணாவின் கொள்கைகளை கடைபிடித்தால் அரசியலில் பகை இருக்காது; தமிழாற்றுப்படை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேச்சு

அண்ணாவின் கொள்கைகளை கடைபிடித்தால் அரசியலில் பகை இருக்காது; தமிழாற்றுப்படை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேச்சு
அண்ணாவின் கொள்கைகளை கடைபிடித்தால் அரசியலில் பழி, பகை, ஊழல் இருக்காது என்று தமிழாற்றுப்படை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
சென்னை, 

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் 23வது ஆளுமையாக அண்ணா குறித்த ஆய்வு கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். காஞ்சீபுரத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு உத்திரமேரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. க.சுந்தர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

அண்ணா என்ற ஒற்றை சொல்லில் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு சரித்திரம் அடங்கியிருக்கிறது. அவமானப்பட்டுக்கிடந்த மானம், அடையாளமில்லாத நிலம், பாரம்பரியத்தை இழந்த மொழி, பண்பாட்டை தொலைத்த இனம் என்று எல்லா வழிகளிலும் இழிவடைந்து கிடந்த தாழ்ந்த தமிழகத்தை மீட்டுக்கொடுத்த அறிவு போராளி அண்ணா. அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பிறகும் அவர் போட்டுக்கொடுத்த கோட்டுக்குள்ளே தான் தமிழ்நாட்டு அரசியல் இன்னும் நடந்தேறி வருகிறது. நோயுற்று கிடந்த தமிழர்களுக்கு முரட்டு வைத்தியம் பார்த்தவர் பெரியார் என்றால், அன்பு வைத்தியம் பார்த்தவர் அண்ணா.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று சொன்னதில் கடவுள் மறுப்பை அண்ணா நெகிழ்த்திக்கொண்டார். ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்றதில் நம்பிக்கையாளர்களையும் தன்பக்கம் நகர்த்திக்கொண்டார்.

அவரது அரசியல் தமிழும், திரை தமிழும், இலக்கிய தமிழும், மேடை தமிழும் தமிழர்களுக்கு ஒரு சங்கீதமாக இருந்தன. பண்டிதப் பொருளாக இருந்த கவிதையை பாமரப் பொருளாக்கிய பாரதியைப்போல், உயர்குடிப் பொருளாய் இருந்த உரைநடையை கல்லா மக்களின் கலைப்பொருள் ஆக்கியவர் அண்ணா என்று கருதலாம்.

ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க கருதியது அவரது கடமை. தான் ரத்தம் சிந்தினாலும் எதிரி கண்ணீர் சிந்தக்கூடாது என்பது அவரது கண்ணியம். சட்டத்தை எதிர்ப்பதுகூட சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்பது அவரது கட்டுப்பாடு. இந்த மூன்று மட்டும் நிகழ்கால அரசியலில் கடைபிடிக்கப்பட்டால் இத்தனை பகையில்லை, பழியில்லை, ஊழலில்லை, ஒழுக்கமின்மையில்லை.

இந்த விழாவுக்கு எல்லா வழிகளிலும் துணைநின்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அண்ணாவின் உருவப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, ‘நக்கீரன்’ கோபால், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், ஆளூர் ஷாநவாஸ், அண்ணாவின் பேரன் மலர்வண்ணன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். வெற்றித்தமிழர் பேரவையின் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் பூவேந்தன் நன்றி கூறினார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– அண்ணா பிறந்த காஞ்சி மண்ணிலே கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை வரிசையிலே அண்ணா குறித்த கட்டுரை ஆற்றுவது பொருத்தமானது, போற்றுதற்குரியது.

அண்ணா குறித்து வழங்குகின்ற கட்டுரை, காலம்கடந்து நிற்கும் ஆற்றல் பெற்றது என அறுதியிட்டுக் கூறி, அண்ணா நிறுவிய தி.மு.க.வுக்கு தலைமை பொறுப்பை ஏற்றிருக்கின்ற நான், கவிஞர் வைரமுத்துவுக்கும், இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கத்தையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.