“போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி


“போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 5 March 2019 3:30 AM IST (Updated: 5 March 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

“எனது குடும்ப வாழ்க்கையை கெடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார்.

சென்னை,

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

“உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் விசாரணைக்கு கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. எனது குடும்ப வாழ்க்கையில் புகுந்து பிரச்சினைகளை உருவாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது இந்த நடவடிக்கை போதாது. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்தை கெடுத்த அவருடைய நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர் இன்னொரு குடும்பத்தை இனிமேல் கெடுக்காத அளவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொள்கிறேன்.

எனது மனைவியுடன் உள்ள பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக்கொள்வேன். எனது மகளை நன்றாக படிக்க வைக்க உதவி செய்வேன். எனது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் செலவழித்து கட்டிய வீட்டை நான் எப்படி சேதப்படுத்துவேன்.

சமூக வலைதளங்களை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சினிமா இல்லாவிட்டால், இந்த தாடி பாலாஜியை யாரும் மதிக்கமாட்டார்கள். சினிமாதான் என்னை இந்த அளவுக்கு வாழ வைத்துள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story