“இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை” - நடிகை ரோகிணி விளக்கம்
இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை என நடிகை ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.
இளையராஜா பிறந்த நாளையொட்டி சென்னையில் கடந்த மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய அவரது இசைநிகழ்ச்சி தற்போது தனியார் டெலிவிஷனில் ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோகிணி மீது இளையராஜா கோபமாக பேசிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேடையில் இளையராஜா, நடிகர் விக்ரம், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் இருக்கும்போது நடிகை ரோகிணி, “இயக்குனர் ஷங்கரும், ராஜா சாரும் இந்த மேடையில் இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதை பார்க்க வேண்டும் என்று நிறைய பேருக்கு ஆவலாக இருக்கிறது” என்றார்.
உடனே இளையராஜா குறுக்கிட்டு “இப்படியெல்லாம் கேட்க கூடாதும்மா. நீ எனக்கு சான்ஸ் கேட்கிறியா” என்றார். உடனே ரோகிணி, “இல்ல.. இல்ல” என்று பதில் அளிக்க, மீண்டும் இளையராஜா ‘இப்படி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. இப்ப ஏன் அந்த விஷயத்தை எடுக்குற நீ? அவருக்கு சவுகரியமா இருக்கிற ஆட்களை வச்சுட்டு அவரு வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரைப்போய் ஏன் தொந்தரவு பண்ற” என்றார்.
இந்த காட்சியை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிட்டனர். இதுகுறித்து ரோகிணி தனது முகநூல் பக்கத்தில் “இளையராஜா என்னிடம் கோபப்பட்டதை பற்றி ஆதங்கப்படும் அனைவருக்கும் நன்றி. நான் அதை பெரிதாக கருதவில்லை. விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story