திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? -தீபிகா படுகோனே


திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? -தீபிகா படுகோனே
x
தினத்தந்தி 12 March 2019 3:00 AM IST (Updated: 11 March 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு அருகதை இல்லாமல் யாரும் பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.

திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன.

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

Next Story