தெலுங்கு நடிகரை தாக்கியதாக நடிகர் விமல் மீது போலீசில் புகார்
தெலுங்கு நடிகர் அபிஷேக், நடிகர் விமல் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமிழில் ‘பசங்க’ படத்தில் நடித்து பிரபலமான விமல் தொடர்ந்து களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, நேற்று இன்று, மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னிராசி, களவாணி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அதே பகுதியில் தெலுங்கு நடிகர் அபிஷேக்கும் தங்கி இருந்து ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விமலை அபிஷேக் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து இரவில் அபிஷேக் வீடு திரும்பினார். அப்போது விமல் நண்பர்கள் சிலருடன் அவரை வழிமறித்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் அபிஷேக் தாக்கப்பட்டார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
இதைத்தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் அபிஷேக் புகார் அளித்தார். விமல் குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
Related Tags :
Next Story