இரண்டு ஆண்டுகளாக பலத்த எதிர்பார்ப்பில் ‘சஹோ’
தெலுங்கு சினிமாவில் 2002-ம் ஆண்டு ‘ஈஸ்வர்’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர், பிரபாஸ். இவர் தயாரிப்பாளரான உப்பலபதி சூர்ய நாராயண ராஜூவின் மகன் ஆவார்.
பிரபாஸ் நடிப்பில் முதல் இரண்டு படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியைப் பெற வில்லை. 2004-ம் ஆண்டு ஷோபன் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் திரிஷா நடித்த ‘வர்ஷம்’ மிகப்பெரிய பெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பிரபாசுக்குப் பெற்றுத் தந்தது. இந்தப் படம் தான் தமிழில் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் ‘மழை’ என்ற பெயரில் வெளியானது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரபாஸ், சில வெற்றிகளையும், சில தோல்விகளையும் சந்தித்து வந்தார். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘மிர்ச்சி’ திரைப்படம் அவருக்கு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் வைத்திருந்த உடற்கட்டுதான், அவருக்கு ‘பாகுபலி’ திரைப்படத்தைப் பெற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் வரை நடித்து வந்த பிரபாஸ், ‘மிர்ச்சி’ படத்திற்குப் பிறகு ஒப்பந்தமான ‘பாகுபலி’ இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வெளியானது. எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கம், வரலாற்று கதாபாத்திரம், அதில் இருக்கும் கிராபிக்ஸ் பணிகள் என அந்தப் படத்திற்கு அவ்வளவு காலம் ஆனதில் வியப்பு ஒன்றும் இல்லை. அந்த காத்திருப்புக்கான பலன், பிரபாசுக்கு பலமடங்காக திரும்பி வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ முதல் பாகம் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனைப் படைத்தது.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள், அதாவது 2017-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி -2’, உலகம் முழுவதும் 10 நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து, தெலுங்கு சினிமாவையும், நடிகர் பிரபாசையும் உலக அரங்கில் முக்கியமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. அதோடு வர்த்தக ரீதியாகவும் பிரபாஸ் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
‘பாகுபலி’ படம் முடிவடைந்த உடனேயே, ‘சஹோ’ படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமானார். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ், டி- சீரியஸ், தர்மா புரொடக்ஷன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. இந்தப் படமும், ‘பாகுபலி’ போலவே அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படுவதால், இத்தனை தயாரிப்பாளர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் ‘சஹோ’ திரைப்படத்தை, சுஜீத் இயக்குகிறார். இது இவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாகும். இவர் இதற்கு முன்பு சர்வானந்த் நடிப்பில் உருவான ‘ரன் ராஜா ரன்’ என்ற படத்தை இயக்கியவர். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘சஹோ’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். தவிர நெய்ல் நிதின் முகேஷ், மலையாள நடிகர் லால், அருண்விஜய், மந்திராபேடி, ஜாக்கி ஷெராப், குன்ஹே பாண்டே உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ஐதராபாத், மும்பை, அபுதாபி, ருமேனியா உள்ளிட்ட பகுதியில் ஆறுகட்டமாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் முடிந்து விட்டதாகவும், மேற்கொண்டு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் வருகிற சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில் இந்தப் படத்திற்கான சாட்டிலைட் உரிமையை பார்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் ரூ.42 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக கூறுகிறார்கள். இது சீனாவைத் தவிர்த்து மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறதாம். ‘பாகுபலி’ படத்தின் மூலமாக பிரபாசுக்கு சீனாவில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதால், அங்கு மட்டுமே ஒரு பெரிய தொகைக்கு சாட்டிலைட் உரிமை கிடைக்கும் என்று சினிமா தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.
‘சஹோ’ படத்தில் அன்டர்கவர் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பல பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மேலும் ஸ்கூபா டைவிங் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார். ஸ்ரத்தா கபூருக்கு இந்தப் படம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று சொல்லப்படுகிறது. அவரது கதாபாத்திரம், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். ஸ்ரத்தா கபூருக்கு சண்டைக் காட்சிகளும் இருப்பதாக சொல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நெய்ல் நிதின் முகேஷ் நடிக்கிறார். அவரோடு ஜாக்கி ஷெராப், குன்ஹே பாண்டேவும் வில்லனாக நடித்துள்ளனர். தவிர மந்திராபேடி அதிரிபுதிரியான வில்லி வேடம் ஏற்றிருப்பதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு, வருடத்திற்கு ஒரு படம் பிரபாஸ் நடிப்பில் வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள், அதன் பிறகும் கூட இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அந்தக் காத்திருப்புக்கான அதிரிபுதிரி கதையம்சத்தோடு ‘சஹோ’ வெளியாகி, அவர்களை ஆனந்தப்படுத்தும் என்று நம்புவோம்.
Related Tags :
Next Story