வக்கீல் வேடத்தில் நடிக்கும் அஜித்குமார் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது


வக்கீல் வேடத்தில் நடிக்கும் அஜித்குமார் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
x
தினத்தந்தி 4 April 2019 5:00 AM IST (Updated: 3 April 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முடிந்தது.

அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இதில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அஜித்குமார் வக்கீலாக வருகிறார். 3 பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வாதாடுகிறார் அஜித்குமார். இதனால் அந்த பெண்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன.

அவற்றில் இருந்து காப்பாற்றி கோர்ட்டு மூலம் அந்த பெண்களுக்கு எப்படி நியாயம் கிடைக்க செய்கிறார் என்பது கதை. இந்த படத்தில் தாடி மீசையுடன் வக்கீலாக அஜித் நடித்த காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. பின்னர் தாடியை எடுத்து வித்யாபலனுடன் நடித்த காட்சிகளை எடுத்தார்கள்.

இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கியது. அதன்பிறகு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக் குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். விரைவில் இந்த படத்துக்கு அஜித்குமார் டப்பிங் பேசுகிறார். படத்தை ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

Next Story