தமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்தவர் : நடிகை ராதிகா சரத்குமார்


தமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்தவர் : நடிகை ராதிகா சரத்குமார்
x
தினத்தந்தி 4 April 2019 5:00 AM GMT (Updated: 4 April 2019 5:00 AM GMT)

தமிழ் திரையுலகில் யதார்த்த இயக்குனராக தனி முத்திரை பதித்தவர் டைரக்டர் மகேந்திரன். தமிழ் சினிமாவை நவீன உலகத்திற்கு அழைத்து வந்தவர்.

திரைப்படங்களில் அவரது கதை அமைப்பு, பாத்திர அமைப்பு புதுமையாக இருக்கும். ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமை அவரது தனிச்சிறப்பு. டைரக்டர் மகேந்திரன் டைரக்டு செய்த மெட்டி என்ற படத்தில் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. டைரக்டர் பாரதிராஜாவால் நான் அறிமுகப்படுத்தப்பட்டாலும் டைரக்டர் மகேந்திரனுடன் பணிபுரியும் போது புதிய அனுபவம் ஏற்பட்டது.

படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு அவர் முழு சுதந்திரம் கொடுப்பார். கதாபாத்திரங்களை, எந்தக் கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்கும் என்பதை அவர் முடிவு செய்து அதன்படி வேலை வாங்குவார். அவரது கையைப் பிடித்து கொண்டு நடந்து செல்வதை போல் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். அவர் டைரக்டர் மட்டும் அல்ல சிறந்த எழுத்தாளரும் கூட.. தங்கப்பதக்கம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

அவரை பார்க்கும்போதெல்லாம் உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய எழுதுங்கள் என்று கூறுவேன். ஒரு காட்சி இப்படி அமைய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அதை தத்ரூபமாக கலைஞர்களிடம் இருந்து வரவழைத்து விடுவார். அது அவரது தனித்திறமை ரஜினிகாந்த் உள்பட பல கலைஞர்களுக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார்.

விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகர் ஆனார். அந்த படத்தில் அவர் கொடூர வில்லனாக நடித்தார். கடைசியாக நான் அப்போதுதான் அவரை பார்த்தேன். அப்போது என்ன சார், என்னையே கொன்னுட்டீங்களே இது நியாயமா? என்று கேட்டேன். அந்த அளவுக்கு அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. பிரபல டைரக்டராக இருந்தாலும் படத்தில் நடிக்கும்போது, நாங்கள் வேலை செய்கிற அளவுக்கு அவரும் எப்படி பேசுனும்? பார்வை எப்படி இருக்கனும்? என்று டைரக்டரிடம் சிரத்தையுடன் கேட்டுக் கொள்வார்.

டைரக்டர் மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள் படங்கள் யதார்த்த நிலையை பிரதிபலித்து இலக்கிய படைப்புகளாகவே மிளிர்கின்றன. தமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்து, தமிழ்சினிமாவை சர்வதேச அளவிற்கு அழைத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். அவரது படங்கள் அப்போது எடுத்தபடம், இப்போது எடுத்தபடம் என்று சொல்ல முடியாது. எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடிய தரமான படமாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் தனி அத்தியாயத்தை படைத்தவரை இழந்துவிட்டோம். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.



Next Story