பெண் வேடத்தில் யோகிபாபு


பெண் வேடத்தில் யோகிபாபு
x
தினத்தந்தி 5 April 2019 3:45 AM IST (Updated: 4 April 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

ஜாம்பி என்ற படத்தில் யோகிபாபு பெண் வேடத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு, சந்தானத்துக்கு பிறகு முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு தற்போது 15–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நடித்த ஐரா சமீபத்தில் திரைக்கு வந்தது. குப்பத்து ராஜா, வாட்ச்மேன், கொரில்லா படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. 

எமன் வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ‘தர்ம பிரபு’ படம் மே மாதம் வெளியாக இருக்கிறது. அரசியலை கடுமையாக சாடும் வகையில் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யோகிபாபுவும் யாஷிகா ஆனந்தும் இணைந்து ஜாம்பி என்ற படத்தில் நடித்துள்ளனர். 

கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், ஜான்விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை புவன் நல்லான். ஆர் இயக்கி உள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.

பெரும்பகுதி படப்பிடிப்பு விடுதியை சுற்றியே நடந்துள்ளது. இந்த படத்தில் யோகிபாபு பெண் வேடத்திலும் சில காட்சிகளில் வருகிறார். அந்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கோடையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Next Story