தமிழில் ‘அவெஞ்சர்’ படம் அயன்மேனுக்கு குரல்கொடுத்தார், விஜய் சேதுபதி


தமிழில் ‘அவெஞ்சர்’ படம் அயன்மேனுக்கு குரல்கொடுத்தார், விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 6 April 2019 3:30 AM IST (Updated: 5 April 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

அவெஞ்சர் படத்தில் அயன்மேனுக்கு தமிழில் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வரிசையில் அவெஞ்சர்ஸ் என்ட் ஹேம் படம் இம்மாதம் இறுதியில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. படத்துக்கான பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடி உள்ளார்.

இந்தி பாடல் ஏற்கனவே வெளியானது. தமிழ் பாடலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, “எதிர்காலத்தில் இந்தியாவிலும் அவெஞ்சர் மாதிரி படங்கள் உருவாகலாம். அவெஞ்சர் படம் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பாடல் ஒரு பாலமாக இருக்கும். இதில் நான் நடனம் ஆடி பாடியதை வைத்து சினிமாவில் நடிப்பேனா? என்று கேட்கப்படுகிறது. நான் நடிக்க மாட்டேன்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி கூறும்போது, “அவெஞ்சர் படத்தில் அயன்மேனுக்கு தமிழில் நான் குரல் கொடுத்து இருக்கிறேன். நானும் அந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு தமிழில் ஆண்ட்ரியா டப்பிங் குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி உள்ளார்.

Next Story