கலைக்குடும்பத்தின் இளவரசி
வரலாற்று பின்னணிகொண்ட குடும்பத்தை சேர்ந்த பட்டோடி நவாப்-நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோர் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர், அவர்களது மகன் சைய்ப் அலிகான்.
சைய்ப் அலிகான் முதலில் நடிகை அம்ருதா சிங்கை காதலித்து மணந்தார். அவர்களது மகள் சாரா அலிகான். (பின்பு சைய்ப் அலிகான், அம்ருதா சிங்கை விவாகரத்து செய்துவிட்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்) தனது தாயார் அம்ருதா சிங்குடன் வசித்து வரும் சாரா அலிகானும் நடிகையாகி விட்டார். இவர் கேதார்நாத் என்ற சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். அந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
இளம் நடிகை சாரா அலிகானின் பேட்டி:
சினிமா வெளியானதும் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு, குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்?
என் நடிப்பை பார்த்ததும் குடும்பத்தினர் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அப்பா சைய்ப் அலிகான் என்னை மனந்திறந்து பாராட்டினார். அவர் ‘உன்னை நான் குழந்தை என்றல்லவா நினைத்திருந்தேன். கதாநாயகியாகி விட்டாயே.. உன்னால் எப்படி திடீரென்று நன்றாக நடிக்க முடிந்தது!’ என்று வியப்பாக கேட்டார். அது மறக்க முடியாதது.
நீங்கள் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், நீங்கள் நடிப்புத்திறனுடனே பிறந்திருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடனே அவர்கள் அனுமதிக்கவில்லை. முதலில் படித்து முடி. அடுத்து நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்றார்கள். ஆனால் நான் விடவில்லை. ‘நடிக்க வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடிப்பு, படிப்பு இரண்டையும் என்னால் ஒன்றாக கவனித்துக்கொள்ள முடியும்’ என்று பிடிவாதம் பிடித்து நடிக்க வந்தேன்.
உங்கள் பாட்டி ஷர்மிளா தாகூரின் பாராட்டும் உங்களுக்கு கிடைத்ததா?
ஆம். எனது நடிப்பை பார்த்துவிட்டு பலர் அவருக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். அதனால் பாட்டி, ‘உன்னை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். உன் அம்மா அம்ருதா போலவே நீயும் இருக்கிறாய்’ என்றார். என் அம்மா நடித்த முதல் படத்தின் பெயர் பேதாப். அந்த படத்தில் நடித்தபோது என் அம்மாவின் தோற்றத்தையும், இன்றைய எனது தோற்றத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசமே தெரியாது.
கேதார்நாத் படத்தை பார்த்துவிட்டு பாட்டி, என் அம்மாவை அழைத்துப் பேசினார். அம்மாவிடமும் என் நடிப்பை பற்றி புகழ்ந்தார். முன்பு இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். நான் நடிக்க வந்ததால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த படத்தால் உங்கள் அப்பாவுக்கும்- அம்மாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறதா?
ஆமாம். அவர், என் அம்மாவுக்கு ‘உன்னோடு சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், நீ விட்டுச்சென்ற நிழல் இன்று உன்னை பிரதிபலிக்கிறது. சாராவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்’ என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்.
பாட்டி உங்களுக்கு தொழில்ரீதியாக சொன்ன அறிவுரை என்ன?
படப்பிடிப்பில் யாருடனும் நமது குடும்ப விஷயங்களை பேசாதே. சமூக வலைத் தளங்களிலும் குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொள்ளாதே. எப்போதும் உன் வேலையில் கவனமாக இரு. எவ்வளவு பெரிய கலைக்குடும்பத்தில் இருந்து நீ சினிமாவுக்கு சென்றிருந்தாலும் உன் உழைப்பு மட்டுமே உன்னை உயர்த்தும் என்று சொன்னார்.
கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவரமுடியும் என்று நினைக்கிறீர்களா?
அப்படி கவர முடியும் என்பது தவறான கண்ணோட்டம். தனிப்பட்ட முறையில் நமது திறமையைக் காட்டவேண்டும். கவர்ச்சியைக் காட்டி காலத்தை ஓட்ட முடியாது.
கலைக்குடும்பம் என்பதால் உங்களுக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்ததா?
ஆமாம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்த அறிமுக வாய்ப்பை வைத்துக்கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. முதல் முறை வாய்ப்பு தந்தவர் மீண்டும் வந்து அழைக்கவேண்டும் என்றால் அதற்கு திறமை தேவை.
ஆங்மாரே என்ற பாடலுக்கு நீங்கள் ஆடிய நடனம் உங்களை மிகவும் பிரபலமாக்கி விட்டது. அவ்வளவு சிறப்பாக நடனம் ஆட என்ன காரணம்?
அதில் என்னோடு நடனம் ஆடிய ரண்வீரின் பங்களிப்பு அதிகம். அவர்தான், நாம் முதலில் ரசித்து ஆடவேண்டும். நாம் ரசித்து ஆடினால் ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றார். இசையை நாம் ஆழ்ந்து ரசி்த்தால், நம்மிடம் இருந்து நடன அசைவுகள் தானே வரத்தொடங்கி விடும் என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நானும் ஆடினேன். திரையில் பார்த்தபோது என் ஆட்டமே எனக்கு வியப்பை தந்தது.
நடிகர் ரோகித் ஷெட்டி உங்களை வருங்கால சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே..?
அவர் வார்த்தை பலிக்கட்டும். சூப்பர் ஸ்டார் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவும். காலம் அதற்கு துணை நிற்கட்டும். ஆனால் நாளைய சூப்பர் ஸ்டார் என்பதால் நான் இன்றே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. கடற் கரைக்கு ஜாலியாக வாக்கிங் போக முடியாது. ஷாப்பிங் போக முடியாது. நினைத்த நேரத்தில் ஜிம்முக்கு போக முடியாது. அந்த சுதந்திரத்தை எல்லாம் இப்போதே அனுபவித்தாக வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.
Related Tags :
Next Story