`காக்டெய்ல்' படத்தில் கதை நாயகனாக யோகி பாபு


`காக்டெய்ல் படத்தில் கதை நாயகனாக யோகி பாபு
x
தினத்தந்தி 12 April 2019 12:23 PM IST (Updated: 12 April 2019 12:23 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய பறவையுடன் `காக்டெய்ல்' படத்தில் கதை நாயகனாக யோகிபாபு

முன்னணி நகைச்சுவை நடிகராகி விட்ட யோகி பாபு, ஒரு புதிய படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, `காக்டெய்ல்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அறிமுக இயக்குனர் முருகன் டைரக்டு செய்கிறார்.

இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடிக்கிறார்கள். `காக்டெயில்' என்ற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்' படத்தின் டைரக்டரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரிக்கிறார். `காக்டெயில்' படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

``இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகி பாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாசிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். இரண்டாவது கட்ட படப் பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

கதைப்படி, யோகி பாபுவும், அவருடைய நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார்கள். கொலையானது யார், அந்த கொலையை செய்தது யார், அதில் இருந்து யோகி பாபுவும், நண்பர்களும் எப்படி வெளியே வருகிறார்கள்? அதில் பறவையின் பங்கு என்ன? என்பதே கதை.''


Next Story