நடிகர் சங்கத்துக்கு ஜூலை மாதம் தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். தற்போது நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தரைத்தளத்துடன் மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் உருவாகி உள்ளது. நடிகர் சங்க அலுவலகம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.
அடுத்து உள் அலங்கார வேலைகள் நடக்க உள்ளன. செலவு ரூ.30 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மீண்டும் நிதி திரட்ட நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழாவை விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜூலை மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்தும் தேதியை முடிவு செய்கிறார்கள். நட்சத்திர கலைவிழாவை எங்கு எப்போது நடத்துவது என்பதையும் அறிவிக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story