காதல் வந்தது ஆனால் அதில் கவனம் செலுத்த நேரமில்லை


ஓவியா
x
ஓவியா
தினத்தந்தி 14 April 2019 6:01 AM GMT (Updated: 14 April 2019 6:01 AM GMT)

தமிழ் பட உலகின் அழகான கதாநாயகிகளில் ஒருவர், ஓவியா. இளம் தயாரிப்பாளர் நசீர் தயாரித்து, சற்குணம் டைரக்‌ஷனில் உருவான ‘களவாணி’ படத்தில், விமல் ஜோடியாக ஓவியா அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், ஒரே படத்தில் அவர் பிரபலமானார். இதுவரை அவர் 25 படங்களில் நடித்து இருக்கிறார். இதில் தமிழ் படங்களுடன் மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களும் அடங்கும்.

ஓவியா திரையுலக அனுபவம் பற்றி அவர் இங்கே கூறுகிறார்:-

“என் சொந்த ஊர், கேரள மாநிலம் திருச்சூர். அங்குள்ள விமலா கல்லூரியில், ‘பி.ஏ.’ (ஆங்கில இலக்கியம்) படித்து முடித்தேன். கல்லூரி ஆண்டு விழாவில், நாடகங்களில் நடித்து இருக்கிறேன். 2007-ம் ஆண்டில், என் திரையுலக பயணம் ஆரம்பமானது. ‘கங்காரு’ என்ற மலையாள படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தேன். தொடர்ந்து பிருதிவிராஜ் ஜோடியாக ‘புது முகம்’ என்ற மலையாள படத்தில் நடித்தேன்.

2010-ம் ஆண்டில், ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானேன். அதில் நான், பள்ளிக்கூட மாணவியாக நடித்து இருந்தேன். பத்திரிகைகளில் என் அழகையும், நடிப்பையும் பாராட்டி, விமர்சனங்கள் வந்தன. எனக்கு நிறைய புது பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அத்தனை பெரிய பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவில்லை. என் கண்கள், ஆனந்த கண்ணீரால் நனைந்தன. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தேன். கமல்ஹாசன் நடித்த ‘மன்மதன் அம்பு’ படத்தில், கவுரவ வேடம் ஏற்றேன். மெரினா, மூடர் கூடம், மதயானை கூட்டம், கலகலப்பு ஆகிய படங்கள் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன.

கதாநாயகிகளுக்கு இடையே போட்டி இருப்பது உண்மைதான். போட்டியில்லாத துறையே கிடையாது. சினிமாவில், எனக்கு போட்டி என்று நான் யாரையும் நினைக்கவில்லை. யார்-யார் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள்? என்று நான் விசாரிப்பதில்லை. யாருக்கு எவ்வளவு சம்பளம்? என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை. எனக்கு யாரும் எதிரிகளாக இல்லை. நானும் யாருக்கும் எதிரியாக இல்லை. அப்படி எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதால் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன்.

என் அழகை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள். என் முகத்தை விட, மனசு ரொம்ப அழகு என்று தைரியமாக சொல்வேன். மனசு அழகாக இருந்தால், முகத்தில் அழகு கூடும் என்று நம்புகிறேன். கல்லூரியில் படிக்கும்போது, எனக்கு காதல் வந்திருக்கிறது. அதை வளர்த்துக் கொள்வதற்குள் சினிமாவுக்கு வந்து விட்டேன். அப்போது எனக்கு 18 வயது. சினிமாவுக்கு வந்தபின், என் கவனம் நான் நடிக்கும் படங்கள் பக்கம் திரும்பி விட்டது. அதன் பிறகு காதலிக்க நேரமில்லை.

யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட மாட்டேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு துணிச்சல் அதிகம். என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். என் முதல் படத்தில் இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை, படப்பிடிப்புகளுக்கு தனியாகவே வருகிறேன். பயந்தால், பிடித்த விஷயங்களை பண்ண முடியாது.

நான் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. வாழ்க்கையில் எல்லாமே அதுவாக அமைகிறது. சினிமாவுக்கு வந்ததும் அப்படித்தான். யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ பழகி விட்டேன். அதனால்தான் திருமணம் பற்றி கவலைப்படவில்லை. அதற்கு என்ன அவசரம்? எனக்கு பாதுகாப்பாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். தமிழ் மக் களுக்கு அன்பு அதிகம். அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

சினிமாவில் என் வேலையை நான் சிறப்பாக செய்து வருவதாக கருதுகிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின், பெரிய திருப்பம் ஏற்பட்டது உண்மைதான். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்னை தேடி வருகின்றன. சந்தோஷமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள். என் நடிப்புக்கு போதுமான சம்பளத்தையே கேட்கிறேன். காசுக்கு நான் அடிமையாகவில்லை. கதைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

யாரிடமும் போய் எனக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதில்லை. என் முதல் பட வாய்ப்பு கூட, அதுவாகத்தான் வந்தது. நான் போய் கேட்டு வரவில்லை. இன்று வரை, என்னை தேடி வருகிற படங்களில்தான் நடிக்கிறேன். எதிர்காலத்திலும் இப்படித்தான் இருப்பேன்” என்கிறார்.

Next Story