கடவுளும், கமர்ஷியலும் கலந்த ‘பிரம்மாஸ்திரா’


கடவுளும், கமர்ஷியலும் கலந்த ‘பிரம்மாஸ்திரா’
x
தினத்தந்தி 4 May 2019 9:33 AM IST (Updated: 4 May 2019 9:33 AM IST)
t-max-icont-min-icon

பாலிவுட்டில் ரன்பீர் கபூர்- ஆலியாபட் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா.

படத்தில் இந்த ஜோடிகளோடு அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா ஆகியோரும் இணைந்திருப்பது, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை கரண்ஜோகர் தயாரிக்கிறார். அயன் முகர்ஜி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ‘வேக் அப் சைடு’, ‘ஏ ஜவானி ஹே தீவானி’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங் களிலுமே ரன்பீர் கபூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது மூன்றாவது படமான ‘பிரம்மாஸ்திரா’விலும், ரன்பீர் கபூரையே கதாநாயகனாக ஆக்கி இருக்கிறார் அயன் முகர்ஜி. அதற்கு அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நிஜத்திலும் காதல் ஜோடியாக வலம் வரும் ரன்பீர் கபூர்- ஆலியா பட் ஜோடி, திரையிலும் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும். இதன் மூலமாக இதுநாள் வரை சமூக வளைத்தலங்களிலும், பத்திரிகை களிலும் வெளியான ‘ரன்பீர் கபூர், ஆலியாபட் காதலில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்பது போன்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி ஆலியாபட் கூறும்போது, “எங்கள் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு இருந்ததும், கொஞ்ச நாள் பிரிந்து இருந்ததும் உண்மைதான். ஆனால் அவை எல்லாம் தற்போது சரியாகி விட்டது. அதனால் உடனடியாக ‘கல்யாணம் எப்போது?’ என்று கேட்டு விடாதீர்கள். அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்று பதிலளித் திருக்கிறார்.

சரி.. நாம் ‘பிரம்மாஸ்திரா’ படத்திற்கு வருவோம். இந்தப் படம் ஆன்மிகமும், தற்போதைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் கமர்ஷியலும் கலந்த கலவையாக உருவாகி வருகிறது. இது ஒரு வகையான ‘பேண்டசி’ கதை என்கிறார்கள். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தின் பெயர் ‘சிவா.’ அது கடவுள் சிவபெரு மானின் பெயரைக் குறிப்பதாக வைக்கப்பட்டுள்ளதாம். அதே போல் ஆலியாபட் கதாபாத்திரத்தின் பெயர் ‘இஷா.’ இது பார்வதி தேவியின் பெயரை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கிறது.

புராணங்களில் அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாக கூறப்படும் பிரம்மாஸ்திரம், சிவாவின் கையில் கிடைக்கிறது. அதை வைத்து அவர் என்ன செய்கிறார், அதன் விளைவுகள் என்ன என்பதைத்தான், இந்தப் படத்தில் கடவுளையும், கமர்ஷியலையும் கலந்து சொல்ல இருக்கிறாராம், இயக்குனர் அயன் முகர்ஜி. இந்தப் படத்தில் ஆன்மிகமும் முக்கிய பங்கு வகிப்பதால்தான், படத்திற்கான பூஜையை சிவராத்திரியில் போட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, மவுனி ராய் ஆகியோர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

‘பிரம்மாஸ்திரா’ படம் பற்றி 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் கரன் ஜோகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 2018-ம் ஆண்டு முதல் கட்டப் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு லண்டனிலும், முக்கியமான சில காட்சிகள், ஸ்காட்லாந்து பகுதிகளிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை முதலில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாது என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. அதற்கு படத்தில் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே காரணம். தரமான முறையில் தொழில்நுட்ப பணிகளை செய்வதால், கால தாமதம் ஏற்படுவதாகவும், அதனால் அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறையில் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றி படத்தின் இயக்குனரும், படத்தின் கதாசிரியருமான அயன் முகர்ஜி கூறுகையில், “இந்தப் படத்திற்கான விதை, 2011-ம் ஆண்டிலேயே எனக்குள் விழுந்து விட்டது. இது எனது கனவுப் படம் என்று கூட சொல்லலாம். கதை, திரைக்கதை, கதாபாத்திர படைப்பு, இசை மட்டுமின்றி, வி.எப்.எக்ஸ் துறையிலும் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் பிரமாண்ட படைப்பாக இதை உருவாக்கி வருகிறோம். நாங்கள் நினைத்தபடி பிரமாண்டமான முறையில் இந்தப் படம் வருவதற்கு, இன்னும் கால அவகாசம் தேவை என்று, எங்களுடைய வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பக் குழுவினர் கருதிய காரணத்தினால்தான், இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால இடைவெளி, திரைப்படத்தை சிறப்பான முறையில் முடிப்பதற்கும், சினிமாவை நேசிப்பவர்களுக்கு பெருமைப்படக்கூடிய காவியமாகவும் வளர கிடைத்த காலவெளி என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ, ஒரு பிரமாண்ட படத்தை உருவாக்கும்போது, அதன் வெளியீட்டை அவ்வளவு சரியாக யாரும் கணித்து விட முடியாது. அதற்கு சில தடைகளும் வரத்தான் செய்யும். அது படத்தை சிறப்பாக செதுக்கி எடுத்து வர கிடைத்த கால நேரம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ‘பிரம்மாஸ்திரா’ மிகச் சிறந்த படைப்பாக வெளிவர அதிக சாத்தியக் கூறுகள் உள்ளது.
|



Next Story