பார்த்திபன் மீதான புகாரில் கண்காணிப்பு கேமரா ஆய்வு
பார்த்திபன் மீதான புகாரின் அடிப்படையில், கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
‘புதிய பாதை’ படத்தை இயக்கி நடித்து பிரபலமான பார்த்திபன், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, புள்ளை குட்டிகாரன், இவண், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் வருகிறார். இந்த நிலையில் பார்த்திபன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் தன்னை தகாத வார்த்தையால் திட்டி காலால் எட்டி உதைத்ததாக கே.கே.நகரை சேர்ந்த கவிஞர் ஜெயம்கொண்டான் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை முயற்சி புகார் நகைச்சுவை என்றும், இதன் மூலம் ஜெயம்கொண்டான் கவிஞராக பிரபலமாகி விட்டார் என்றும் பார்த்திபன் கூறினார். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் பார்த்திபனுக்கு எதிரான புகாரை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கி உள்ளனர்.
இந்த புகார் உண்மையா? என்று விசாரணையில் இறங்கி உள்ளனர். தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நுங்கம்பாக்கம் பிரிவியூ தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட தினத்தில் தியேட்டருக்கு வந்தவர்கள் யார் என்ற பட்டியலையும் தயார் செய்கின்றனர். பார்த்திபனிடமும் நேரில் விசாரணை நடத்த உள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story