என் கதையை திருடி என்னையே நடிக்க வைத்தனர் - நடிகர் பார்த்திபன் புகார்


என் கதையை திருடி என்னையே நடிக்க வைத்தனர் - நடிகர் பார்த்திபன் புகார்
x
தினத்தந்தி 12 May 2019 11:33 PM GMT (Updated: 12 May 2019 11:33 PM GMT)

தன் கதையை திருடி தன்னையே அதில் நடிக்க வைத்ததாக நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்துள்ளார்.


வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் நடித்துள்ள ‘அயோக்யா’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கடந்த 10-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்தன. தியேட்டர் வாயிலில் ரசிகர்கள் விஷால் கட்-அவுட்கள், கொடி தோரணங்களும் அமைத்து இருந்தனர்.

ஆனால் படம் அன்றைய தினம் வெளியாகவில்லை. தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். படம் தள்ளிப்போனதை டுவிட்டரில் கண்டித்த பார்த்திபன், “கடைசி நிமிட இடையூறுகளால் அயோக்யா வெளியீடு தள்ளி விடப்படுவது அயோக்கியத்தனம்” என்று கூறியிருந்தார்.

படத்தின் செலவு திட்டமிட்டதை விட ரூ.2 கோடியை தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளித்ததால் படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு மறுநாள் படம் திரைக்கு வந்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தனது கதையை திருடிவிட்டதாக அயோக்யா படக்குழுவை கண்டித்து டுவிட்டரில் இன்னொரு பதிவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில் “அயோக்கியா’த்தனம். 94-ல் வெளியான என் ‘உள்ளே வெளியே’ படத்தை லவுட்டி உரிமை பெறாமல் தெலுங்கில் ‘டெம்பர்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெற்றிபெறச் செய்து தமிழிலும் தற்போது எடுத்து அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம்?. குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல் பெருமையுடன் பதிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story