திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்


திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்
x
தினத்தந்தி 19 May 2019 8:30 AM IST (Updated: 18 May 2019 5:43 PM IST)
t-max-icont-min-icon

“முழு திரைஉலகத்தையுமே மாமன்-மச்சான்கள் வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். வெளியிலிருந்து வரும் இதர திறமைசாலிகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

மாமன்- மச்சான்களுக்கு இடம்கொடுப்பவர்களில் முக்கியமானவர் டைரக்டர் கரன் ஜோஹர்” என்று அதிரடியாக இந்தி திரை உலகம் பற்றி குற்றம்சாட்டியவர் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவருடைய குற்றச்சாட்டு இந்தி திரை உலகில் பலருக்கும் பொருந்தும்.

“முதலில் யாராவது ஒருவர் வருவார். அவர் காலூன்றி விட்டால்போதும் உறவுக்காரர்களை எல்லாம் அழைத்துவந்துவிடுவார். வெளியிலிருந்து வரும் திறமைசாலிகளுக்குகூட இங்கே இடமில்லை. அதனால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எந்த துறையாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு என்பது தவறானது. மற்றவர்கள் மனம் தளர்ந்துவிடும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது” என்றும் கங்கனா கண்டிக்கிறார்.

அதற்கு பதில் தரும் விதமாக, “மாமன்-மச்சான் உறவுமுறை கொண்டவர்கள் ஒரே இடத்தில் வேலைபார்ப்பது நல்ல விஷயம்தானே! இதில் மற்றவர்களுக்கு தொந்தரவு ஒன்றும் இல்லையே” என்கிறார் கரன்ஜோஹர்.

அதற்கு பதில் தரும் கங்கனா, “எத்தனை இடையூறுகள் வந்தாலும் புதிதாக வருபவர்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது. திறமை ஒருநாள் ஜெயிக்கும். உறவுகளின் கூட்டணியோடு போட்டியிட்டு ஜெயிப்பதுதான் வாழ்க்கையின் நிஜமான வெற்றி” என்று கூறும் கங்கனா தொடர்ந்து கூறும் கருத்துக்கள்!

ஆசிட் தாக்குதல்

நம்மை அடிக்கடி தொந்தரவு செய்பவர்களை சும்மா விட்டுவிடக்கூடாது. அது அவர்களை ஊக்குவிப்பது போல ஆகிவிடும். அவ்வப்போது திருப்பி பதிலடி கொடுக்க வேண்டும். அமைதி ஒருநாளும் பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. என் தங்கைக்கு ஒருத்தன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தான். அவளும் அமைதியாக இருந்தாள். ஒருநாள் முகத்தில் ஆசிட் வீசிவிட்டான். ஆரம்பத்திலேயே தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஆகி இருக்காது.

‘மீடூ’ மிக அவசியம்

பாலியல்தொல்லை என்றாலே அதைப் பெண்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற தைரியத்தில் சிலர் இருக்கிறார்கள். மீடூ வந்ததால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நானா படேகர் பற்றி தனுஸ்ரீ கொடுத்த புகாரில் பாலிவுட்டே கலகலத்துப்போனது. அதை தொடர்ந்து பலபேர் புகார் கொடுத்தார்கள். பல பெரிய புள்ளிகள் இன்று அமைதியாகி விட்டார்கள். எங்கே தங்கள் பெயர் வெளிவந்து விடுமோ என்ற பயத்துடன் காணப்படுகிறார்கள். அந்த பயம் இருக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கு மனைவி என்பவர் பலர்முன் மேடையில் பெறப்படும் விருது போன்றவர். விருதை கண்ணாடி பெட்டிக்குள் அடைத்துவைப்பதுபோல் மனைவியையும் வீட்டிற்குள் அடைத்து வைத்துவிடுகிறார்கள். அவர்களது ‘விளையாட்டுகளை’ எல்லாம் வெளியே வைத்துக்கொள்கிறார்கள். அதுபற்றி மனைவியும் பேசக்கூடாது. பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். ‘மீடூ’ வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.

தைரியம் தேவை

பெண் குழந்தையை வளர்ப்பது, பாதுகாப்பது எல்லாமே சவாலான விஷயம்தான். அதனால் பெண் என்றாலே பிரச்சினை என்று நினைத்து விடுகிறார்கள். பெண்களுக்கு தைரியமாக வாழ கற்றுக்கொடுக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் நுண்ணறிவு பயிற்சி அவர்களுக்கு தரப்பட வேண்டும். இந்த சமூகத்தில் பெண்களுக்கென்று தனி மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே எனக்குள் ஒரு வேகம் இருந்தது. அதற்காக உழைத்தேன். மனதில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் என் லட்சியத்தை நினைத்துக்கொள்வேன். இன்னும் வேகம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

குடும்ப மிரட்டல்

நான் நடிகையாக வேண்டும் என்று முடிவுசெய்தபோது அது வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. நடிக்கக் கூடாது என்றார்கள். பேச்சை மீறிப் போனால் வீட்டில் இடம் கிடையாது என்றார்கள். நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். அதே நேரம் வீட்டில் உள்ளவர்கள் ஆதரவும் தேவை அல்லவா. இவ்வளவு பெரிய உலகத்தில் என்னால் தனியாக வாழமுடியாது என்பதை எடுத்துச் சொன்னேன். குடும்பம் என்பது பாதுகாப்பான ஒரு அமைப்பு. அதை விட்டு ஓட முடியாது. என் ஆசைகள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள எல்லோர் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. நினைத்ததுபோல் நானும் நடிகையாகி விட்டேன். அதற்கு பெரிதும் உதவியது என் அம்மா தான். நீங்களும் உங்கள் பெண் குழந்தைகளின் லட்சியத்திற்கு தடைபோடாதீர்கள். இந்த சமூகத்தில் அவர்கள் காலூன்ற துணை நில்லுங்கள். அதுதான் நல்ல குடும்பத்தின் அடையாளம். 

Next Story