ரசிகர்கள் விரும்பவில்லை என்றால் ரஜினிகாந்த் சர்ச்சை காட்சி நீக்கப்படும் -பட அதிபர் ஐசரி கணேஷ்
ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சியை நீக்கி விடுவேன் என்று கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அவரது நண்பர் யோகிபாபு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கி சொல்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடுகிறது. அதை பார்த்ததும் ஜெயம்ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்கிறார்.
இந்த காட்சி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறும்போது, “கோமாளி படத்தின் டிரெய்லரில் ரஜினிகாந்த் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள காட்சி குறித்து கமல்ஹாசன் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். அவரது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன்.
அவருடைய 2.0 படத்தில் நடித்து இருக்கிறேன். ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன். ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட காட்சியை நீக்கி விடுவேன்” என்றார்.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, “நான் ரஜினியின் ரசிகன், அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக அந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்றார்.
Related Tags :
Next Story