வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை தெலுங்கு நடிகர் கைது


வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை தெலுங்கு நடிகர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2019 3:30 AM IST (Updated: 9 Aug 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்ததால் தெலுங்கு நடிகர் கைது செய்யப்பட்டார்.

தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்த ‘பாகுபலி’ படத்தில் நடித்துள்ளவர் மதுபிரகாஷ். தெலுங்கு டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் பாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து ஐதராபாத்தில் வசித்து வந்தார். மதுபிரகாசுக்கும், சக நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதி சந்தேகித்தார். மதுபிரகாஷ் அடிக்கடி வெளியிலும் தங்கினார்.

இதனால் இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. கணவர் மீது போலீசிலும் பாரதி புகார் அளித்தார். குடும்பத்தினர் இருவரையும் சமரசப்படுத்தினர். இந்த நிலையில் மதுபிரகாஷ் வெளியே சென்றபோது பாரதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் பாரதியின் பெற்றோர் தங்கள் மகள் சாவுக்கு மதுபிரகாஷ் தான் காரணம் என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் மகள் பாரதியை மதுபிரகாஷ் 2014-ல் திருமணம் செய்துகொண்டார். அப்போது ரூ.15 லட்சம் வரதட்சணையாக கொடுத்தோம். ஆனாலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு பாரதியை கொடுமைப்படுத்தினார். அது மட்டுமின்றி மதுபிரகாசுக்கு இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்தது. இதனால் பாரதி மன அழுத்தத்தில் இருந்தார். இது அவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபிரகாஷை கைது செய்தனர்.

Next Story