வலிமை படத்தில் 2 வேடங்களில் அஜித்?


வலிமை  படத்தில்  2  வேடங்களில்  அஜித்?
x
தினத்தந்தி 22 Nov 2019 5:00 AM IST (Updated: 22 Nov 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்தார். இவர்கள் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. படத்துக்கு கதாநாயகி தேர்வு நடக்கிறது. சமீபத்தில் போனிகபூரை நயன்தாரா சந்தித்து பேசினார்.

இதன்மூலம் வலிமை படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. வலிமை படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை பரிசீலிப்பதாக தகவல் பரவி உள்ளது.

இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். அஜித் நடித்து 1999-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற வாலி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, “அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து பட குழுவினர் யாரும் என்னை அணுகி பேசவில்லை. அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக நடிப்பேன்” என்றார்.

வலிமை படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது. படத்துக்காக அவர் இளமை தோற்றத்துக்கு மாறிய புகைப்படமும் ஏற்கனவே வெளியானது. தற்போது கருப்பு கண்ணாடி அணிந்த இன்னொரு தோற்றமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன்மூலம் அவர் வலிமை படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

Next Story