ஐதராபாத் பெண் டாக்டரை ‘கற்பழித்து எரித்து கொன்ற குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்’ திரையுலகினர் ஆவேசம்
ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து எரித்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என திரையுலகினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாவட்டத்தின் ஐதராபாத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 27) என்ற கால்நடை டாக்டர் மாதாப்பூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந்தேதி இரவு மருத்துவமனையில் இருந்து பணி முடித்து வீட்டுக்கு வரும் வழியில் அவரது மொபட் திடீரென பஞ்சராகி விட்டது.
இதனால் சாலையில் தனியாக சிக்கிக்கொண்ட அவரை மர்ம நபர்கள் சிலர் கற்பழித்து, எரித்து கொலை செய்துள்ளனர். அவரது உடல், பாதி எரிந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தின் சட்டபல்லி பாலத்தின் கீழே கண்டெடுக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதைப்போல இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என திரைத்துறையினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஒரு சமுதாயமாக நாம் நமது ஒழுக்க நெறிகளை இழந்து வருகிறோம். குலை நடுக்கச்செய்யும் நிர்பயா வழக்கு முடிந்து 7 ஆண்டுகள் ஆகி விட்டன. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். நமக்கு கடுமையான சட்டங்கள் தேவை’ என்று வலியுறுத்தி இருந்தார்.
நடிகர் நானி தனது டுவிட்டர் தளத்தில், ‘நான் கடும் கோபத்தையும், கையாலாகாத தனத்தையும் உணர்கிறேன். இதை செய்தவர்களுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் தகும். பிரியங்காவின் ஆன்மா எப்படி சாந்தியடையும்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ‘டாக்டர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலைய செய்துவிட்டது. மனம் நொறுங்கி விட்டது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார்மீது பழி சொல்வது என்றும் தெரியவில்லை. ஐதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணி இருந்தேன். அங்கே இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்? கொடூர கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
நடிகை அனுஷ்கா கூறுகையில், ‘அப்பாவி பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்டது, மனித மனங்களை உலுக்குவதாக உள்ளது. குற்றவாளிகளை கொடிய மிருகங்களுடன் ஒப்பிட்டால், அந்த மிருகங்கள் கூட வெட்கப்படும். சமூகத்தில் பெண்ணாக பிறப்பது குற்றமா? குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வரை இணைந்து போராடுவோம்’ என்று ஆவேசம் தெரிவித்தார்.
நடிகை காஜல் அகர்வால், ‘ஆத்திரம் வருகிறது. பாதுகாப்பான இடம் என்று ஏதாவது இருக்கிறதா? என தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் பெண்கள் பாதிக்கப்படுவது சோகமாக இருக்கிறது. தவறு செய்தவர்களை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்புதான் இப்போதைய தேவை. அது அவசரமாக மாறும் ஒரு சூழல் வரை காத்திருக்கக்கூடாது’ என்று கூறினார்.
இதைப்போல நடிகைகள் ரகுல் பிரீத்சிங், ராஷி கண்ணா ஆகியோரும் பிரியங்காவை கற்பழித்து கொலை செய்தவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story