சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வளவு சீக்கிரத்தில் தங்கை வேடத்துக்கு வந்து விட்டாரே...? அதற்கு காரணம் என்ன? (ஏ.பாலகணேஷ், சென்னை)

ஐஸ்வர்யா ராஜேஷ் மிகப்பெரிய போராட்டத்துக்குப்பின் கதாநாயகி ஆனவர். ‘காக்கா முட்டை’ படத்தில், 2 சிறுவர்களுக்கு அம்மா வேடத்தில் துணிச்சலாக நடித்தது போல், தங்கை வேடங்களிலும் தைரியமாக நடித்து வருகிறார். ‘தங்கை’ வேடம் என்றாலும் அவருக்கு பெயர் கிடைக்கிற மாதிரி வேடங்களாக இருந்தால், உடனே அவர் நடிக்க ஒப்புக்கொள்கிறார்!

***

சிம்பு அரசியலுக்கு வருவாரா? (பி.வேல்முருகன், மேலூர்)

சினிமாவில் அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதை முடிக்காமல் அவர் அரசியலுக்கு போக மாட்டார்!

***

குருவியாரே, தமிழ் சினிமாவில் உள்ள ஒரு மூத்த நகைச்சுவை நடிகர், படங்களில் தமாஷ் பண்ணுவது போல், நிஜவாழ்க்கையிலும் தமாஷ் பண்ணுவாராமே...? அப்படி அவர் சமீபத்தில் சொன்ன ‘ஜோக்’ எது? (கே.இன்பராஜ், கோவை)

‘‘நாலு பக்கம் இருந்து பார்த்தாலும் அழகாக இருப்பாரே...அவர் நடித்த படமா, அது?’’ என்று அந்த நகைச்சுவை நடிகர், ஒரு பிரபல நடிகரை பற்றி சமீபத்தில் கிண்டலாக கேட்டதை மறக்கவே முடியாது!

***

பொதுவாகவே கொல்கத்தாவில் இருந்து வரும் நடிகைகள் எல்லோருமே மிக அழகாக இருப்பார்களாமே...அதற்கு உதாரணமானவர்கள் யார்–யார்? (டி.வி.பத்மராஜ், ராசிபுரம்)

சுவலட்சுமி, ரீமாசென், பூஜாகுமார் ஆகிய மூவரையும் உதாரணமாக கூறலாம்!

***

குருவியாரே, தமிழர்களின் பூர்வீக விளையாட்டான சிலம்பாட்டத்தை முறைப்படி கற்றுக்கொண்ட நடிகர்கள் யார்–யார்? குறிப்பாக அந்த விளையாட்டில், ‘சாம்பியன்’ யார்? (ஆர்.மனோஜ்குமார், கம்பம்)

கமல்ஹாசன், சரத்குமார், பாக்யராஜ், சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராஜ்கிரண், தனுஷ் ஆகியோர் முறைப்படி சிலம்பம் கற்றுக் கொண்டார்கள். சிலம்பாட்டத்தில் ‘சாம்பியன்,’ கார்த்திக்!

***

யோகி பாபு காட்டில் நல்ல மழையா? (என்.மல்லிகா, திருவண்ணாமலை)

விடாமல் பெய்யுமே...அப்படி ஒரு அடை மழை...!

***

குருவியாரே, சமந்தா கர்ப்பமாக இருப்பது உண்மையா? (ஜே.மார்ட்டின், கும்மிடிப்பூண்டி)

அது வெறும் வதந்திதான் என்று சமந்தாவே மறுத்து இருக்கிறாரே...!

***

உலக அழகி ஐஸ்வர்யாராயின் பூர்வீகம் எந்த ஊர்? (சி.மதன், நாகர்கோவில்)

ஐஸ்வர்யாராயின் பூர்வீகம், கர்நாடக மாநிலம் மங்களூரு!

***

குருவியாரே, பழம்பெரும் நடிகையான சவுகார்ஜானகி, ‘கேரவன்’ஐ பயன்படுத்துவதில்லையாமே...என்ன காரணம்? (எம்.ராம்குமார், குன்றத்தூர்)

தயாரிப்பாளர் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணம்தான் காரணம்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து அதிக நாட்கள் ஓடிய படம் எது? அந்த படத்தின் டைரக்டர் யார்? (ஏ.ஜி.முகமது தவ்பீக், மேலப்பாளையம்)

சிவாஜிகணேசன் 3 வேடங்களில் நடித்து அதிக நாட்கள் ஓடிய படம், ‘தெய்வமகன்.’ அந்த படத்தின் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர் தாமு திரையில் தோன்றுவதில்லையே...அவர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்? (ஆர்.ராமச்சந்திரன், முட்டவாக்கம்)

தாமு, தீவிர ஆன்மிகவாதி ஆகிவிட்டார். ஆன்மிகத்தில் இருந்து கொண்டே சினிமாவில் நடிப்பதை அவர் விரும்பவில்லையாம்!

***

வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்த விஜய் சேதுபதி, ‘சங்கத்தமிழன்’ படத்தில் சறுக்கி விட்டாரே...எப்படி? (பி.சூர்யா, கொண்டலாம்பட்டி)

எதிர்பார்த்தது போல் ‘சங்கத்தமிழன்’ படத்தின் திரைக்கதை அமையவில்லை. சறுக்கலுக்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

***

குருவியாரே, மறைந்த ‘முதல்–அமைச்சர்’ ஜெயலலிதாவும், ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயாவும் இணைந்து நடித்து இருக்கிறார்களா? (டி.டேவிட், தூத்துக்குடி)

‘கந்தன் கருணை’ படத்தை பார்க்கவில்லையா? ‘‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’’ என்ற பாடல் காட்சியையும் பார்த்ததில்லையா?

***

படப்பிடிப்பு இல்லாத நேரங்களை நயன்தாரா எப்படி கழிக்கிறார்? (ஏ.ஜேஸ்மின், மணப்பாடு)

இருக்கவே இருக்கிறார், காதலர் விக்னேஷ் சிவன்! இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள்!

***

குருவியாரே, அஜித்குமார் அடுத்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படம் எது? அதன் தயாரிப்பாளர் யார்? (மதியழகன், திருப்பூர்)

தன்னை வைத்து, ‘வீரம்’ படத்தை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட படம் தோல்வி அடைந்ததன் காரணமாக பட நிறுவனம் மிகப்பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டது. அதை கை தூக்கி விடும் நோக்கத்தில், ஒரு படம் நடித்து தருவதாக அஜித்குமார் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்!

***

எப்போது பார்த்தாலும் ஓவியா சிரித்த முகமாகவே இருக்கிறாரே...எப்படி? (என்.அஸ்வின், அருப்புக்கோட்டை)

அப்படி ஒரு அருமருந்தை ஓவியா பயன்படுத்துவதாக கேள்வி!

***

குருவியாரே, ரஜினிகாந்துடன் அடுத்து ஜோடி சேரும் கதாநாயகி தமன்னாவா, கீர்த்தி சுரேசா? (ரஜினி கண்ணன், கோவை–8}

கீர்த்தி சுரேசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது!

***

சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ வெற்றி படம்தானே...? (எஸ்.புகழேந்தி, திண்டுக்கல்)

நிச்சயமாக அது ஒரு வெற்றி படம்தான்!

***

குருவியாரே, நடிகை சீதாவை இப்போதெல்லாம் படங்களில் பார்க்க முடியவில்லையே...ஏன்? (ரா.ஹேமந்த், விருதுநகர்)

உங்கள் ஆதங்கத்தை விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘தம்பி’ படம் தீர்த்து வைக்கும். அதில், சீதா அம்மா வேடத்தில் நடித்து இருக்கிறார்!

***

‘16 வயதினிலே’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

பாரதிராஜா மனது வைத்தால், வரும்!

தொடர்புடைய செய்திகள்

1. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார் குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:- குருவியார், தினத்தந்தி சென்னை-600007.
2. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
3. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
4. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
5. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007