ஐதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம்: “சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி” நடிகை நயன்தாரா அறிக்கை


ஐதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம்: “சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி” நடிகை நயன்தாரா அறிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2019 11:30 PM GMT (Updated: 7 Dec 2019 10:47 PM GMT)

ஐதராபாத்தில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவத்தை நடிகை நயன்தாரா பாராட்டி இருக்கிறார். ‘சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி’, என்று அவர் கூறியிருக்கிறார்.

சென்னை,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்துக்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள்.

பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என்று அழுத்தி சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்துவைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்ச்சி செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்திலும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதை கற்றுத்தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்கவேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகமாக மாற்ற வேண்டியது நம் கடமை.

அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story