பா.ஜனதா கட்சியில் சேரும்படி நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு


பா.ஜனதா  கட்சியில்  சேரும்படி   நடிகை  நயன்தாராவுக்கு  அழைப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 4:45 AM IST (Updated: 12 Dec 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சியில் சேரும்படி நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். தொடர்ந்து இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டார். அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு தரையில் உட்கார்ந்து பக்தர்களோடு உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானது.

இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றும் வழிபட்டார். முருகன் கோவிலில் நயன்தாராவுடன் சேர்ந்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனும் சாமி கும்பிட்டார்.

அப்போது நயன்தாராவை பா.ஜனதா கட்சியில் சேரும்படி அவர் அழைத்தார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நீங்கள் பா.ஜனதாவில் சேர்ந்தால் அந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய முடியும். டெல்லியில் பிரதமரை சந்தித்து பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிடுங்கள் என்று கூறினார்.

அவர் பேசியதை நயன்தாரா சிரித்தபடியே கேட்டுக்கொண்டு நின்றார். பதில் எதுவும் சொல்லவில்லை. நயன்தாரா ஏற்கனவே தமிழ், தெலுங்கில் தயாரான ஸ்ரீராமராஜ்ஜியம் பக்தி படத்தில் சீதையாக நடித்து இருந்தார்.

தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்திலும் விரதம் இருந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

Next Story