என்னை அவமதிப்பதா? நடிகர் சித்தார்த் ஆவேசம்


என்னை அவமதிப்பதா? நடிகர் சித்தார்த் ஆவேசம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 12 Dec 2019 7:32 PM GMT)

என்னை அவமதிப்பது முறையல்ல என்று நடிகர் சித்தார்த் கூறினார்.

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றவர்களை போலீசார் அதே இடத்தில் சுட்டு கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

போலீசார் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமே தவிர அவர்களே சட்டம் கிடையாது. பலாத்காரம் செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் என்கவுண்ட்டர் சரியான வழி இல்லை என்று கூறினார். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்ததையும் கண்டித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, சித்தார்த் என்பவர் யார் என்றே தெரியாது. அவர் எந்த படத்தில் நடித்துள்ளார்? விளம்பரத்துக்காக பேசும் அவரைப் போன்றவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என்றார். இந்த வீடியோவை ஒருவர் வெளியிட்டு சித்தார்த் உங்களை பற்றித்தான் அமைச்சர் பேசுகிறார் என்று குறிப்பிட அதற்கு பதிலடி கொடுத்து சித்தார்த் கூறியதாவது:-

“நான் யார் என்று அமைச்சர் கேட்டு இருக்கிறார். அவரது அரசுதான் எனக்கு 2014-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியது. 2017-ம் ஆண்டிலும் விருது தருவதாக அறிவித்து இதுவரை அதை எனக்கு வழங்கவில்லை. விளம்பரத்துக்காக பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சொந்த முயற்சியால் உயர்ந்து இருக்கிறேன். தேசத்துக்காக வரி செலுத்தும் குடிமகன்களை அவமதிப்பது முறையல்ல”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story