பாடலுக்குப் பாடல் புதுமை


பாடலுக்குப் பாடல் புதுமை
x
தினத்தந்தி 3 Jan 2020 7:02 PM IST (Updated: 3 Jan 2020 7:02 PM IST)
t-max-icont-min-icon

பாடல் எழுதுகின்றபோது சில சமயம் ‘அந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?’ என்பதை கேட்பார் அப்பா. வழக்கத்திற்கு மாறாக அவர்களது பெயரைப் பாடலில் சேர்ப்பார். சில சமயம் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை மறைமுகமாக சொல்வார். சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லிவிடுவார். பாடலுக்குப் பாடல் ஏதாவது புதுமை செய்யவேண்டும் என்று அப்பா நினைப்பார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படம் ‘பணத்தோட்டம்.’ அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இருவரும் பாடுகின்ற ஒரு காதல் பாடல்.

சரோஜாதேவியை ‘கன்னடத்து பைங்கிளி’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். அதுமட்டும் இல்லை. சரோஜாதேவி பேசுகின்ற கொஞ்சும் தமிழ், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். அத்துடன் சரோஜாதேவியின் உடல் அமைப்பிற்காகவே பெரும்பாலான படங்களில் அவர் அசைந்து நடந்து செல்வதை (Back Shot) காட்டுவார்கள். அதனால் பாடலின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆர் பாடுவதாக-

“பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா”

என்று அப்பா எழுதினார்.

எம்.ஜி.ஆர்., கொடை வள்ளல் என்பது உலகிற்கு தெரியும். அவர் கேரள மேனன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்றைய கேரளம் என்பது அன்றைய சேர நாடு. ஆனால் எம்.ஜி.ஆர். முழுக்க முழுக்க வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால் சரோஜாதேவி பாடுவதாக-

“பாடுவது கவியா - இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா”

என்று எழுதினார்.

இந்த வரிகளை சாதாரணமாகப் பார்த்தால் ஒரு காதல் பாடல் போலத் தோன்றும். ஆழமாகப் பார்த்தால் தான் அனைத்தும் விளங்கும்.

இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டப் பிறகு, எம்.ஜி.ஆர். அந்தப் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு புன்னகை செய்தார். அடுத்த சில தினங்களில் அவர், அப்பாவை ஒரு ஸ்டூடியோவில் பார்த்தார்.

“என்ன கவிஞர்... சேரனுக்கு உறவா?” என்றார் எம்.ஜி.ஆர்

“ஆமா, பாரிவள்ளல் மகன். அவர்தான் செந்தமிழர் நிலவு” என்றார் அப்பா.

எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார்.

இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நல்ல மனமும் வேண்டும். இருவருக்கும் இரண்டும் இருந்ததால் தான் நமக்கு பல நல்ல பாடல்கள் கிடைத்தன.

ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கி, சிவாஜி - பத்மினி நடித்த படம் ‘குருதட்சணை.’ அந்தப் படத்தில் கே.ஏ.தங்கவேலு, பயாஸ்கோப் காட்டுபவராக வந்து பாட்டுப் பாடுவதில் இருந்து படம் தொடங்கும்.

“பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு
வந்து நின்னு கண்ணான காட்சி பாரு

என்று தொடங்கும் அந்தப் பாடலில் தான், எத்தனை செய்தி களைச் சொல்லி இருப்பார் அப்பா.

முதலில்-

“தஞ்சாவூரு கோவில் பாரு
தாஜ்மகால் அழகைப் பாரு
வேளாங்கண்ணி மாதா பாரு
மனசுக்குள்ள வேற்றுமை இல்லாம பாரு”

என்று மத நல்லிணக்கத்தை சொல்லுவார்.

பாட்டின் இன்னொரு சரணத்தில், அந்தப் பக்கமாக வரும் சிவாஜியை, பயாஸ்கோப் பார்க்க அழைப்பார் கே.ஏ.தங்கவேலு. எப்படி அழைப்பார் தெரியுமா?-

“பாரு பாரு கண்ணா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
படிக்காத வீரனைப் பாரு
சிவாஜி படிச்சுப்புட்டா பேரு பெத்தாரு”

(படத்தில் சிவாஜியின் பெயர் கண்ணன். அதையும், சிவாஜியின் பெயரையும் சேர்த்து எழுதினார். சிவாஜி பள்ளிக்குப் போகாமல் சிறுவயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

எழுத்தாளர் சிவசங்கரியின் ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ என்ற கதையை, முக்தா ஸ்ரீனிவாசன் வாங்கி ‘அவன்- அவள்-அது’ என்ற பெயரில் படமாகத் தயாரித்தார். விசுதான், அந்தப் படத்திற்கு திரைக்கதை - வசனம். சிவகுமார் - லட்சுமி நடித்த அந்தப் படத்தின் பாடல்களை அப்பா எழுதினார்.

நாயகனும் நாயகியும் பாடுகிறார்கள் என்று முக்தா, ஒரு பாடலுக்கான சூழலை விளக்குகிறார். அப்பா பாடல் வரிகளை சொல்கிறார்.

“இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம் (ராகம் பாவம்)
பிள்ளை ஸ்ருங்கார நாதம்”

சரணம் எழுதும்போது, முக்தா ஸ்ரீனிவாசனிடம், “படத்தோட கதாநாயகன் - நாயகி யாரு?” என்று அப்பா கேட்கிறார்.

“சிவகுமார்-லட்சுமி” என்று சொல்கிறார் முக்தா.

சிறிது யோசித்த அப்பா, கடகடவென்று சரணத்திற்கான வார்த்தைகளைச் சொல்கிறார்.

“லட்சுமி வந்தாளாம்.. வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்”

என்று நாயகன் பாட,

“சிவனும் வந்தானாம்.. அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல்கொண்டானாம்”

என்று நாயகி பாடுகிறாள்.

பாட்டு வரிகளில் சிவகுமாரும் லட்சுமியும் வந்துவிட்டார்கள்.

சமீபத்தில் இளைய திலகம் பிரபுவை, ஒரு பேட்டி எடுக்கச் சென்றேன்.

கேமராவை தயார் செய்து கொண்டிருக்கும் போது, பிரபுவிடம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் , தான் முதலில் பார்த்த பாடல் கம்போசிங் பற்றி சொன்னார்.

“துரை! ‘தங்கப்பதக்கம்’ படத்திற்கான பாடல் கம்போசிங், சிவாஜி புரொடக்க்ஷன்ஸ்ல நடக்குது. நான் அங்க போய் இருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதன் அவருடைய இசைக் கலைஞர்களுடன் வந்திட்டாரு. சித்தப்பா ஷண்முகம் எம்.எஸ்.வி.யோட பேசிக்கிட்டு இருக்காரு. கொஞ்ச நேரம் கழிச்சு கவிஞர் வந்தாரு.

வந்தவர் நேரா சித்தப்பா கிட்ட “ஷான்... மருந்து தீர்ந்து போச்சு. உன் கிட்ட இருக்கா”ன்னு கேட்டார்.

சித்தப்பா இருக்குதுன்னு சொல்ல, “சரி, போகும்போது வாங்கிக்கிறேன்”னு சொன்னார்.

பாடல் எழுத உக்காந்தாங்க. உங்கப்பா எம்.எஸ்.வி. இடுப்பை கிள்ள, அவர் கூச்சத்தில கத்த. இப்படி கொஞ்ச நேரம் கலாட்டாவா இருந்துச்சு.

‘அண்ணே! வேலையை பாப்போம்ண்ணே’ என்றார் எம்.எஸ்.வி.

‘சரி... என்ன சிச்சுவேஷன்?’ -கவிஞர் கேட்டார்.

‘அண்ணே.. கதையில அவர் ஒரு கண்டிப்பான காவல் அதிகாரி. அவர்கிட்ட அவர் மனைவியே பயத்தோட தான் பேசுவாங்க. ஆனா அவருக்கு அவர் மனைவி மேல கொள்ளைப் பாசம். அதை வெளிக்காட்டிக்காம இருப்பாரு. இந்தச் சூழல்ல, ஒரு நாள் அவர் மனைவிக்கு பக்கவாதம் வந்திடுது. அவர் தன் மனைவியை ‘வீல் சேர்’ல வச்சு தள்ளிக்கிட்டே பாடுறாரு. இதுல அவர் தன் மனைவி மேல வச்சிருக்க பாசம் தெரியணும்.”

ஒரு சிகரெட்டை பத்தவச்சுக்கிட்டு உங்கப்பா யோசிக்க ஆரம்பிச்சாரு. அப்புறம் அவரோட அசிஸ்ட்டென்டைப் பார்த்து “கண்ணப்பா எழுது” அப்படின்னு சொல்லிட்டு

“சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணிதீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்”

அப்படின்னு சொன்னவர்.

அடுத்த வரியை சொல்றதுக்கு முன்னாடி, ‘படத்தோட ஹீரோயின் யாரு?’ அப்படின்னு கேட்டார்.

“கே.ஆர்.விஜயா..”

அப்படி சொன்ன உடனே டக்குனு அடுத்த வரியைச் சொன்னார்

“சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிலை போல சாய்ந்தால் கலை எங்கு போகும்”

கே.ஆர்.விஜயாவுக்கு ‘புன்னகை அரசி’ன்னு தானே பட்டப் பேர். அவங்க சிரிப்பு தானே பேமஸ்.

சரியா பதினஞ்சு நிமிஷத்தில பாட்டை எழுதிட்டு, ‘ஷான் மருந்து எங்க?’ என்று கேட்டார்.

சித்தப்பா மருந்தையும் பணத்தையும் கொண்டுவந்து தந்தார். ரெண்டையும் வாங்கிக்கிட்டு கிளம்பிட்டார்.

இதை பிரபு சொல்லும்போது அவரோட முகபாவனையை பார்க்கணுமே. கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு சந்தோஷ முறுவல்.

-தொடரும்.

ரஜினிக்காக எழுதிய பாடல்

நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் படங்களுக்கு, எப்போதும் அப்பாதான் பாடல்கள் எழுதுவார். பாடல் எழுதுவதில் பாலாஜி தலையிட மாட்டார். ஆனால் அவர் ‘பில்லா’ என்ற படத்தை தயாரித்தபோது, ஒரே ஒரு கோரிக்கை வைத்தார்.

‘பில்லா’ படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த். அந்த கால கட்டத்தில் ரஜினியின் உடல் நிலை சம்பந்தமாக பல்வேறு தவறான தவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்த தகவல் களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போலவும், ரஜினி நன்றாக இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு இந்த பாடல் மூலம் சொல்லவேண்டும் என்றும், அப்பாவிடம் பாலாஜி கேட்டுக்கொண்டார்.

“சரி” என்று சொன்னார் அப்பா.



அரசியலில் இதுபோன்ற எத்தனை நிகழ்வுகளை அவர் பார்த்திருப்பார். அவருக்கா இது போன்ற வதந்திகளுக்கு பதில் சொல்லத் தெரியாது? கவிதையாக இருந்திருந்தால் இன்னமும் பலமான பதிலாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. டியூனுக்கு உட்பட்டு ஒரு கருத்தை சொல்லும்போது அளவு என்ற கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். ஆனால் அதற்குள்ளேயும் என்ன ஒரு தெளிவாக எழுதி இருப்பார் அப்பா. அந்தப் பாடல்-

“நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க.. இப்பென்ன செய்வாங்க..
நாலு படி மேலே போனா நல்லவனை விட மாட்டாங்க
பாடுபட்டு பேரை சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க
யாரு சொல்லி என்ன பண்ண
நானும் இப்போ நல்லா இருக்கேன்
உங்களுக்கும் இப்ப சொன்னேன்
பின்னாலே பார்க்காத முன்னேறு முன்னேறு..
ஆளுக்கொரு நேரம் உண்டு அவுகவுங்க காலம் உண்டு
ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா மூவுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசிலே வைச்சு
பின்னாலே பார்க்காம முன்னேறு முன்னேறு..”

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், அப்பா இந்த வரிகளை சொன்ன வேகம் தான் என் நினைவிற்கு வரும்.

Next Story