ஹாலிவுட் கதாநாயகர்கள் : பால் நியூமென்
மிகச் சிறந்த நடிப்புத் திறமை உள்ளவர், சொந்த வாழ்க்கையில் தயாள மனம் படைத்தவர் என ஹாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர், பால் நியூமென்.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில், 1925-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி பிறந்தவர், பால் லியோனர்டு நியூமென். இவரது தந்தை விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். பால் நியூமெனுக்கு சிறுவயதில் இருந்தே நாடகம், சினிமா பிடிக்கும் என்பதால், பள்ளி நாடகங்களில் நடித்தார்.
பள்ளி வாழ்க்கை முடிந்ததும் 1943-ம் வருடம் கல்லூரியில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே கடற்படையில் விமான ஓட்டியாக தன்னை இணைத்துக் கொண்ட இவர், ஒரு நல்ல விமானியாக பிரகாசிக்க விரும்பினார். ஆனால் அவரது கண்ணில் இருந்த சிறிய குறைபாடு அதற்கு தடையாக அமைந்தது. அதனால் இரண்டாம் உலகப்போரின் போது, பசிபிக்கடலில் கப்பலில் ரேடியோ ஆபரேட்டராகப் பணிபுரிந்தார்.
1946-ம் வருடம் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர், ஓகியோவில் உள்ள சென்யான் கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்தார். கல்லூரியில் கால்பந்து வீரா்களில் ஒருவராக தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் வீரா்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் சிறையில் அடைக்கப்பட்டார். கால்பந்து அணியில் இருந்தும் விலக்கப்பட்டார்.
1949-ல் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, ‘விஸ்கான்சின்’ பகுதியில் இருந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். அங்கேதான் ஜாக்கி விட் என்னும் நடிகையை சந்தித்து மணந்து கொண்டார். 1950-ம் வருடம் தன் தந்தை இறக்கும் வரை நடித்துக் கொண்டு இருந்தார். அதன்பிறகு தன் மனைவியுடன் ஓகியோவிற்குச் சென்று, குடும்ப வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
சிறிது காலங்களில் தன் சகோதரனிடம் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டு, தன் குடும்பத்துடன் கனெக்டிகட் என்ற ஊருக்குச் சென்று, அங்கே ‘யேல்’ பள்ளியில் டிராமாவைப் பற்றி படிக்க ஆரம்பித்தார். ஆனால் நடிப்பு, குடும்பம் இரண்டையும் சமாளிக்க அவரிடம் போதிய பணம் இல்லை. எனவே நியூயார்க் வந்தார். அங்கே நடிகர்களைத் தயார் செய்யும் ஸ்டூடியோ ஒன்றில் சேர்ந்தார். மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ்டீன் மற்றும் ஜெரால்டைன் பேஜ் போன்ற பிரபலங்களும் அங்கே நடிப்பைக் கற்றுக் கொண்டிருந்தனர்.
அங்கே படிப்பை முடித்ததும், பிராட்வே நாடகங்களில் நடிக்க வந்தார். ‘வில்லியம் இங்’ என்னும் பிரபல நாடக ஆசிரியரின் காமெடி நாடகமான ‘பிக்னிக்’ என்னும் நாடகத்தில் நடிக்கத் தேர்வானார். இந்த நாடகம் 14 மாதங்கள் தொடர்ச்சியாக நடந்தது. அதன் மூலம் கிடைத்த பணத்தில், நியூமென் தனது குடும்பத்தை ஒழுங்காக நடத்த முடிந்தது. அமெரிக்காவில் தொடங்கிய டெலிவிஷன் காட்சிகளிலும் அவர் நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து பால் நியூமெனுக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிப்பில் ‘தி சில்வர் சாலிஸ்’ (The Silver Chalice) படம் 1954-ல் வெளிவந்தது. முதல் படத்திலேயே அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. இதையடுத்து வெளியான ‘சம்படி அப் தேர் லைக்ஸ் மீ’ (Somebody up there likes me) படத்தில் இவருக்கு குத்துச் சண்டை வீரர் வேடம். ஒரு உண்மையான வீரருடன், இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது, அனைவருக்கும் வியப்பை அளித்தது.
டென்னிசி வில்லியம்ஸ் என்பவர் பிலபல நாடக ஆசிரியர். அவரது நாடகமான ‘கேட் ஆன் எ ஹாட் டின் ரூப்’ (Cand on a Hot Tin Roof) 1958-ல், அதே பெயரில் படமாக்கப்பட்டது. அதில் பால் நியூமென், ‘பிரிக்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபல நடிகை எலிசபெத் டெய்லர், இவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பைக் கண்டு ஹாலிவுட் உலகம் அயர்ந்துபோனது. முதன் முறையாக அவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
1961-ல் நியூமென் நடிப்பில் வெளியான படம் ‘தி ஹஸ்ட்லர்’ (The Hustler). இந்தப் படமும் இவரது நடிப்பை பறைசாற்றுவதாக அமைந்தது. அதனால் அவர் பெயர் மீண்டும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 1963-ல் ‘ஹூட்’ (HUD) படம் வெளியானது. இது அவருக்கு புகழ் பெற்றுத் தந்த மற்றொரு படம். இதில் எந்த விதமான குறிக்கோளும் இல்லாத ஒரு கவுபாய் கதாபாத்திரத்தில் நியூமென் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காகவும், அவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அடுத்து ‘கூல் ஹேண்ட் லுக்’ (Cool Hand Luke) என்ற படத்தில் நடித்தார். அதிகாரிகளுடன் எந்த சமாதானத்திற்கும் உட்படாத போராட்டக் கைதியாக நடித்த இவரது பெயர் நான்காவது முறையாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
1968-ம் வருடம் பட இயக்கத்திலும் இறங்கினார், பால் நியூமென். 1968-ல் இவர் முதன் முதலாக இயக்கிய படம் ‘ரகேல் - ரகேல்’ (Rachel, Rachel). இதில் இவரது இரண்டாவது மனைவி ஜோன் வுட்வர்ட், பள்ளி ஆசிரியராக நடித்தார். அவரது துல்லியமான நடிப்பும், பால் நியூமெனின் நேர்த்தியான இயக்கமும், படத்தை பிரமாண்ட வெற்றி பெற வைத்தது. நான்கு ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
1981-ல் ‘ஆப்சென்ஸ் ஆப் மாலிஸ்’ (Absence of Malice), 1982-ல் ‘தி வெர்டிக்ட்’ (The Verdict) ஆகிய இரண்டு படங்களுமே, பால் நியூமெனின் சிறந்த நடிப்புக்காக அடுத்தடுத்த வருடங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒரு முறை கூட அவருக்கு நடிப்புக்காக ஆஸ்கார் வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அந்த வருத்தம் ஆஸ்கார் பட விருது தேர்வாளர்களுக்கே இருந்த காரணத்தால், 1985-ம் ஆண்டு பட உலகிற்கு செய்த சேவைக்காக அவருக்கு ஒரு ஆஸ்கார் விருதை தனியாக அளித்தனர். அதைப் பெறும்போது, நியூமென் ஒரு விமர்சனம் செய்தார். அது விருது வழங்கும் உறுப்பினர்கள் இதுவரை செய்த தவறை சுட்டிக்காட்டுவது போல் அமைந்திருந்தது.
1986-ல் ‘தி கலர் ஆப் மணி’ (The color of money). படத்தில் ஒரு குடிகார வியாபார பிரதிநிதியாக நடித்தார். இழிநிலையில் இருந்து அவரை ஒரு இளம் வயது வியாபார பிரதிநிதி காப்பாற்றுவது போல் கதை அமைந்திருந்தது. அந்த இளம் வயது பிரதிநிதி கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போதும் ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் டாம் குரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் வருடங்களில் குறைந்த படங்களில் நடித்தாலும், மிகச் சிறந்த நடிகராகவே பால் நியூமென் திகழ்ந்தார். 2002-ம் ஆண்டு இவரது நடிப்பில் ‘ரோடு டூ பெர்டிசன்’ (Road to Perdition) என்ற படம் வெளியானது. இந்தப் படத்திற்காகவும் இவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கிடைத்தது துணை நடிகருக்கான விருதுதான்.
இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில், உணவுப் பொருட்களை விற்பனை செய்வது, ஆடைகளைத் தயாரித்து பெரிய வியாபார நிறுவனங்களுக்கு வழங்குவது போன்ற தொழில்களைச் செய்தார். அதில் வந்த லாபத்தை முழுமையாக மக்கள் கல்விக்கும், இதர தான தருமங்களுக்கும் வழங்கினார்.
1978- ம் வருடம் “ஸ்காட் நீயூமென் சென்டர்” என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். ஏனெனில் இவரது ஒரே மகனான ஸ்காட் நியூமென், இளம் வயதிலேயே அதிக குடியின் காரணமாக விபத்தில் மரணமடைந்தார். அதனால் இளம் வயதுக்காரர்கள் குடியை நிறுத்தவேண்டும் என்று பிரசாரம், விளம்பரம் செய்யவே இந்த நிறுவனம் உருவானது. சிறு வயதில் குழந்தைகளைத் தாக்கும் பல்வேறு விதமான நோய்களுக்காக, பல இடங்களில் 1988-ல் மருத்துவ முகாம்கள் நடத்தினார்.
2006-ம் ஆண்டு நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “நான் நடிக்க விரும்பினாலும் என் உடல் அதற்கு ஒத்துழைப்பு தராது என்பதால் இந்த முடிவு” என்று கூறினார். அந்த முடிவுக்கு அவரது ஞாபக சக்தி குறைந்ததுதான் காரணம். 2008-ம் வருடம் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
மிகச் சிறந்த நடிகர், தன் மனைவி ஜோன் வுட்வர்டுடன் கடைசிகாலம் வரை இணை பிரியாமல் வாழ்ந்தது, பலருக்கும் பலவித உதவிகள் செய்தது என பல நல்ல விஷயங்களுக்காக பால் நியூமென் இன்றும் ஹாலிவுட் ரசிகர்களால் பேசப்படு கிறார். ஹாலிவுட் பட உலகில் நடிப்புத் திறனும், எல்லா நற்குணங்களும் படைத்த ஒரு நடிகரைப் பார்ப்பது அபூர்வமல்லவா?
-கதாநாயகர்கள் வருவார்கள்.
காதல் காவியம்
‘பிக்னிக்’ என்னும் நாடகத்தில் நடிக்க பால்நியூமென் தேர்வாகியிருந்த நேரம். 1953-ம் வருடம் இந்த நாடகத்திற்கான ரிகர்சல் நடந்தது. அப்போது ஜோன் வுட்வர்ட் என்ற நடிகையுடன் அவர் நடிக்க வேண்டியதிருந்தது. அந்த நடிகை, நாடகத் தயாரிப்பிலும் உதவியாக இருந்தவர். அதனால் பால் நியூமென்னுக்கு அந்த நடிகை மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் தான் ஏற்கனவே மணமானவன் என்பதால், அந்த இளம் நடிகையுடனான நட்பை அவர் தொடரவில்லை.
பின்னாளில், 1958-ம் ஆண்டு ‘தி லாங், ஹாட் சம்மர்’ (The Long, Hot Summer) என்ற படத்தில் ஜோன் வுட்வர்ட்டுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு பால் நியூமெனுக்கு கிடைத்தது. அப்போது இவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது. என்றாலும், முதன் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே அவரை திருமணம் செய்து கொண்டார். இறுதி காலம் வரை, ஜோன் வுட்வர்ட்டுடன் தன்னுடைய வாழ்க்கையை கழித்தார். ஜோன் வுட்வர்ட்டும் அப்படியே. அவர் திருமணம் செய்து கொண்டது, பால் நியூமெனை மட்டும்தான்.
கார் பந்தயம்
1969-ம் வருடம் மீண்டும் நடிகராக மாறிய, நியூமென் ‘வின்னிங்’ (WINNING) என்ற படத்தில் கார் பந்தய பிரியராக நடித்தார். அந்தப் படத்தில் இருந்து நியூமெனுக்கு கார் பந்தயத்தின் மீது ஈடுபாடு தொற்றிக்கொண்டது. அதிவேகமாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டார். 1972-ம் வருடத்தில் இருந்தே இவருக்கு கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் எண்ணம் அடி மனதில் ஊறிக்கொண்டே இருந்தது. 1977-ம் வருடம் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கார் திறப்பில், ஒரு போட்டியில் பட்டம் வென்றார். 1995-ம் வருடம் நடந்த ‘ரோலக்ஸ் 24’ என்னும் போட்டியில் வெற்றிகொண்ட குழுவில் இவரும் ஒரு நபராக இருந்தார். வயதானவர்களுக்கு நடத்தப்படும் 24 மணி நேர தொடர் கார் ஓட்டப் பந்தயத்தில், இவர் முதலாக வந்து வெற்றி பெற்றார்.
- ரா.வேங்கடசாமி
Related Tags :
Next Story