வெள்ளை சட்டை போட்டால் நேர்மையானவரா? நானா படேகரை விளாசிய தனுஸ்ரீதத்தா
தமிழில் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்த தனுஸ்ரீதத்தா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
தனுஸ்ரீயின் மீ டூ புகார் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நானா படேகர் தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்துள்ளார். அவர் மீது மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்திலும் தனுஸ்ரீ புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி நானா படேகருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்று வழக்கை முடித்து விட்டனர்.
இதை எதிர்த்து மும்பை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனுஸ்ரீ வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தனுஸ்ரீதத்தா தனது வக்கீலுடன் நிருபர்களிடம் கூறியதாவது:-
“பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கலாம். மரியாதையும் கிடைக்கும். நானா படேகரிடம் பணம் இருக்கிறது. அவர் நடத்தும் அறக்கட்டளைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் பணத்தை கொட்டி கொடுக்கின்றன. ஆனால் வெளியில் தன்னை ஏழையைப்போல் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்.
அவர் ஒரு பொய்யர், வெள்ளை சட்டையும் காந்தி தொப்பியும் போட்டுக்கொண்டால் நேர்மையானவரா? விவசாயிகளுக்கு உதவுகிறேன். ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறேன் என்று அவர் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை.
இவ்வாறு தனுஸ்ரீதத்தா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story