குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்த்–அஜித்குமார் ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமையை கூற முடியுமா? (ப.கணேஷ்குமார், சென்னை–1)
இருவருமே ஒளிவு–மறைவு இல்லாதவர்கள். வெள்ளை மனதுக்கு சொந்தக்காரர்கள். மனதில் தோன்றுவதை துணிச்சலாக வெளியே சொல்பவர்கள்!
***
‘கபாலி’ புகழ் டைரக்டர் பா.ரஞ்சித் இப்போது இயக்கும் படம் எது, அந்த படத்தின் கதாநாயகன் யார்? (வெ.ரவீந்திரன், திருச்சி)
பா.ரஞ்சித் இயக்கி வரும் புதிய படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை!
***
குருவியாரே, இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் தீபிகா படுகோனேவா, கங்கனா ரணாவத்தா? இவர்களின் சம்பள விவரத்தை சொல்கிறீர்களா? (எம்.பொன்னையா பாண்டியன், கம்பம்)
தீபிகா படுகோனேயை விட, கங்கனா ரணாவத் அதிக சம்பளம் வாங்கி வருகிறார். தீபிகா படுகோனேயின் சம்பளம் ரூ.10 கோடி; கங்கனா ரணாவத்தின் சம்பளம் ரூ.12 கோடி!
***
‘உடுக்கை இடுப்பழகி’ சிம்ரன் மும்பையில் வசிக்கிறாரா அல்லது சென்னையில் வசிக்கிறாரா? அவர் சென்னையில் சொந்த வீடு வாங்கி விட்டதாக பேசப்படும் தகவல் சரியா? (எம்.குணசீலன், அரக்கோணம்)
சிம்ரன், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொந்தமாக வீடு கட்டி, குடியிருக்கிறார். அவ்வப்போது அவர் மும்பைக்கும் சென்று வருகிறார்!
***
குருவியாரே, வடிவேல், சந்தானம் ஆகிய இருவரில் நகைச்சுவை நடிப்புக்காக அதிக சம்பளம் வாங்கியவர் யார்? இரண்டு பேரும் மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்கள் என்கிறார்களே...அது சரிதானா? (ஜே.ஜான் கென்னடி, திருப்பூர்)
சந்தானத்தை விட, வடிவேல் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். வடிவேல், கொஞ்சம் பயந்த சுபாவம். சந்தானத்துக்கு துணிவும், தன்னம்பிக்கையும் அதிகம்!
***
விஜய் சேதுபதியை சில முன்னணி கதாநாயகிகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறதே...அதெல்லாம் உண்மையா? (மா.வெற்றிவேல், சேலம்–2)
காய்த்த மரம்தான் கல்லடி படும். விஜய் சேதுபதி, காய்த்த மரம்!
***
குருவியாரே, ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்புவுக்கு என்ன வேடம்? (சோ.பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை)
அந்த படத்தில், குஷ்பு வில்லியாக நடிக்கிறார். ‘படையப்பா’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்தது போன்ற பரபரப்பான வில்லி வேடம் அது!
***
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் பனை மரம் ஏறும் தொழிலாளியாக நடித்த படம் எது? அந்த படத்தின் இயக்குனர் யார்? (பெ.மோகன், தூத்துக்குடி–3)
அந்த படத்தின் பெயர், ‘காவல் தெய்வம்.’ படத்தை டைரக்டு செய்தவர், கே.விஜயன்!
***
குருவியாரே, தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வெற்றி படமா, தோல்வி படமா? (எஸ்.ராமகிருஷ்ணன், வேலூர்)
தோட்டா சரியாக பாயவில்லை! (வருடக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கி கிடந்த படங்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை!)
***
மீனா ஒரே ஒரு குழந்தை பெற்றதுடன் நிறுத்திக்கொண்டாரே...இந்த விஷயத்தில் அவருக்கு வழிகாட்டி யார்? (எம்.அன்புக்கரசு, வல்லக்கோட்டை)
அந்த விஷயத்தில் மீனாவுக்கு வழிகாட்டிகள்: கே.ஆர்.விஜயா, ரேகா!
***
குருவியாரே, காஜல் அகர்வால் யாரையோ காதலித்து வருகிறார் என்று பேசப்படுகிறதே...அவருடைய காதலர் யார்? (கே.பிரபாகரன், மேட்டுப்பாளையம்)
அவருடைய காதலர் ஒரு மும்பை வாலா! பிரபல தொழில் அதிபர்!
***
ராகவா லாரன்சின் அடுத்த பட கதாநாயகி யார்? (பி.ஞானவேல், தஞ்சை)
நிச்சயமாக ராய் லட்சுமி அல்ல; அவர் இனிமேல் பேயாக நடிக்க மாட்டாராம்!
***
குருவியாரே, நகைச்சுவை நடிப்பில் கோவை சரளாவுக்கு போட்டி இருக்கிறதா? (வி.ரஞ்சித், கோவை)
கோவை சரளாவுடன் தேவதர்சினி மோதி வருகிறார். ஆனால், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை!
***
குருவியாரே, பழைய கவர்ச்சி நடன நடிகை ஜெய்குமாரி இப்போது எங்கே இருக்கிறார்? (எம்.ரவி, கரூர்)
ஜெய்குமாரி, சென்னை வேளச்சேரியில் இருக்கிறார்!
***
‘‘அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு...பொங்குது சின்ன மனசு’’ என்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது? பாடல் காட்சியில் தோன்றி நடித்தவர் யார்? (செ.சேகர், கீழ்க்குடி)
அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘ராமன் எத்தனை ராமனடி.’ அதில் தோன்றி நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!
***
குருவியாரே, பா.ரஞ்சித் டைரக்டராக அறிமுகமான படம் எது? (கே.சின்னதம்பி, சேத்துமடை)
‘அட்டகத்தி.’
***
சரோஜாதேவி காலத்து கதாநாயகிகள் யாரெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? (பெ.வளர்மதி, மதுரை)
சரோஜாதேவியைப்போல் அவருடைய சக தோழிகள் விஜயகுமாரி, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, காஞ்சனா ஆகிய பழைய கதாநாயகிகள் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
***
குருவியாரே, இந்த காலகட்டத்தில், பெண்கள் எப்படியிருக்க வேண்டும்? என்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்பட பாடல் இருக்கிறதா? (எம்.ஜாபர் அலி, வாசுதேவ நல்லூர்)
எம்.ஜி.ஆர். நடித்த ‘விவசாயி’ படத்தில் வரும் ‘‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள,’’ இந்த காலத்து பெண்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல்!
***
நயன்தாரா–விக்னேஷ் சிவன் ஜோடியின் காதல் புனிதமானதுதானா? (ஆர்.பலராமன், ஆலப்பாக்கம்)
புனிதத்தையும் தாண்டியது! விக்னேஷ் சிவனிடம் இருந்து பிரிக்க முடியாதபடி, இவர்களின் காதல், இரண்டு பேர் இதயங்களுடன் சேர்த்து தைக்கப்பட்டு இருக்கிறதாம்!
***
குருவியாரே, விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது தொடர்பாக அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை எதுவாக இருக்கும்? (ஜே.எட்வின் ராஜசேகர், கடலூர்)
சோதனையை சாதனையாக மாற்றும் முயற்சியில் விஜய் ஈடுபடுவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள்!
***
எல்லா பிரபல கதாநாயகர்களும் தங்கள் படங்களில் யோகிபாபுவை சேர்த்துக்கொள்கிறார்களாமே...அதுபற்றி உங்கள் கருத்து..? (எஸ்.வெங்கட் ராமன், புதுச்சேரி)
அதிர்ஷ்ட காற்று யோகிபாபு பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது!
Related Tags :
Next Story