சினிமா செய்திகள்

ஹாலிவுட் கதாநாயகர்கள் : ரிச்சர்டு பர்டன் + "||" + Hollywood heroes: Richard Burton

ஹாலிவுட் கதாநாயகர்கள் : ரிச்சர்டு பர்டன்

ஹாலிவுட் கதாநாயகர்கள் : ரிச்சர்டு பர்டன்
சினிமாவும், நாடகமேடையும் ஒருசேர கொண்டாடிய நடிகர்களில் முக்கியமானவர், ரிச்சர்டு பர்டன். மேடை, திரை தவிர்த்து, தனிப்பட்ட முறையில் வெளியே சென்றாலும் கூட, இவர் மீது மக்கள் அளவுகடந்த அன்பை, மரியாதையை செலுத்தினர். இவரது பெயர் 7 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றால், ரிச்சர்டு பர்டனின் நடிப்புத் திறமையை பறைசாற்ற இதைவிட சான்று எதுவும் இருக்க முடியாது.
ஹாலிவுட்டில் மிகவும் அழகுவாய்ந்தவர் என்று புகழப்பட்ட எலிசபெத் டெய்லரை, இரண்டு முறை திருமணம் செய்தவர் ரிச்சர்டு பர்டன். இவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

ரிச்சர்டு பர்டன், 1925-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி, சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள பான்டிரித்டிபன் என்னும் சிறு ஊரில் பிறந்தார். குடும்பத்தில் பன்னிரண்டாவது பிள்ளை. இவர் தந்தை நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி. ரிச்சர்டுக்கு 2 வயது இருக்கும்போது, தாயை இழந்தார். பிலிப்பர்டன் என்னும் ஒரு ஆசிரியர், இவருக்கு ஒரு பாதுகாவலரைப் போல செயல்பட்டார். ரிச்சர்டை, நாடக மேடைக்கு முதன் முதலாக அறிமும் செய்ததும் இவர்தான்.

பிறந்தபோது இவருக்கு வைக்கப்பட்ட பெயர், ‘ரிச்சர்டு வால்ட்டர் ஜென்சின்ஸ்’ என்பதாகும். தன்னை வளர்த்து ஆளாக்கிய, பிலிப் பர்டன் என்ற பெருமகனின் பெயரில் இருந்த பர்டனை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு, ரிச்சர்டு பர்டன் ஆனார்.

லண்டன் நாடக மேடை பயிற்சி நிலையத்தில் சேர்ந்த ரிச்சர்டு, அங்கு மேடை நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலையில் படிக்க இவருக்கு உதவித்தொகை கிடைத்தது. எனவே அங்கு சேர்ந்து படித்தார். அப்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த காலகட்டம். எனவே பிரிட்டன் விமானப் படையில் சேர்க்கப்பட்டார். 1947-ம் ஆண்டு வரை ராணுவத்தில் இருந்து விட்டு திரும்பியவர், நாடக மேடையின் ஈர்ப்பில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இவரது கம்பீரமான குரலும், வசன உச்சரிப்பும் அனை வருக்கும் பிடித்துப் போனது. 1947-ம் ஆண்டு சர்ஜான் செய்ல்கட் என்ற பிரபல நாடக ஆசிரியரின் ‘தி லேடிஸ் நாட் பார் பர்னிங்’ (The Lady's Not for Burning) என்ற நாடகத்தில் நடித்தார். அதே வருடத்தில் சிபில் வில்லியம்ஸ் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

திரைப்பட உலகைப் பொறுத்தவரை, இவரது நடிப்பு ஏற்ற இறக்கம் இரண்டையுமே கண்டாலும் கூட, இவர் தொடர்ந்து 40 படங்களில் நடித்திருக்கிறார். இவர் திரையில் நடித்த முதல் படம், பாக்ஸ் ஸ்டூடியோவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் கிடைத்தது. 1949-ல் வெளியான அந்தப் படம் ‘தி லாஸ்ட் டேய்ஸ் ஆப் டால்வின்’ (The Last Days of Dolwyn). இதைத் தொடர்ந்து 1952-ல் ‘மை கஸின் ரச்சல்’ (My Cousin Rachel) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் கோல்டன் விருதுதான் கிடைத்தது.

1953-ம் ஆண்டில் ‘தி ரோப்’ (The Robe) என்ற படம் வெளியானது. இந்தப் படத்திற்காகவும் அவர் சிறந்த நடிகருக்கான பிரிவில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்தப் படத்திற்கு வேறு சில பிரிவுகளில் ஆஸ்கார் விருது கிடைத்தாலும், ரிச்சர்டுக்கு விருது கிடைக்கவில்லை. 1956-ல் வெளியான ‘அலெக்ஸாண்டர் தி கிரேட்’ (Alexander the Great) திரைப்படத்தில், அலெக்ஸாண்டர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். 1959-ல் ‘லுக் பேக் இன் அங்கர்’ (Look Back in Anger) திரைப்படத்தில் நடித்தார்.

1977-ம் ஆண்டு ‘எக்ஸார்சிஸ்ட்-2: தி ஹெரடிக்’ (Exorcist II: The Heretic), ‘எக்கூஸ்’ (Equus) ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘எக்கூஸ்’ என்ற பிரமாண்ட திரைப் படத்தில் நடித்ததற்காக, 7-வது முறையாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1980-ம் வருடம் மீண்டும் நியூயார்க் நாடக மேடைக்குத் திரும்பினார். ஆனால் முதுகுத் தண்டில் அபரிமிதமான வலி ஏற்பட்ட காரணத்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவானது. எனவே தற்காலிகமாக நாடக மேடையை விட்டு விலகினார்.

1983-ம் ஆண்டு எலிசபெத் டெய்லருடன் சேர்ந்து ஜார்ஜ் ஆர்வெல் என்னும் பிரபல நாடக ஆசிரியரின் நாடகம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்தார். 1984-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி மூளையில் ஏற்பட்ட பயங்கர கோளாறால், தனது சுவிட்சர்லாந்து மாளிகையில் உயிர்நீத்தார். அப்போது அவரது அருகில் இருந்தது 4-வது மனைவிதான். ரிச்சர்டின் இறப்புக்குப் பிறகு அவரது சொத்துக்கள் அனைத்தையும் இவர்தான் நிர்வகித்தார்.

இவரது வாழ்வே ஒரு நெடுங்கதை போலவே அமைந்து விட்டது எனலாம். பெயர், புகழ், பணம் அனைத்தும் இவரிடம் இருந்தது. ஆனால் மண வாழ்க்கைதான் ஒழுங்காக அமையவில்லை. இவரது டைரிகள், அவர் கைப்பட எழுதிய கடிதங்களை எல்லாம் சேகரித்து, அவற்றை வைத்து 2012-ம் ஆண்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டார்கள்.

காதல் லீலையும்.. மண வாழ்க்கையும்..

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தும் கம்பெனிகளுடன் இவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. அதன் மூலமாக பிராட்வே நாடகமான ‘கம்லாட்’ (Camelot) என்ற நாடகத்தில் 1960-ல் நடித்தார். 1963-ம் ஆண்டும் இதே நாடகத்தில் நடித்தார். அப்போது இவருடன் நடித்தவர்தான், எலிசபெத் டெய்லர். அந்த நேரத்தில், அளவுக்கு மீறிய குடியால், ரிச்சர்டு பர்டனின் கைகள் காபி கோப்பையைக் கூட பிடிக்க முடியாமல் நடுங்கின. அருகில் இருந்த எலிசபெத் டெய்லர்தான், காபி ேகாப்பையை தன் கையால் ஏந்தினார். அப்போது இருவரது கண்களும் கலந்தன.

இவர்களது காதல் லீலைகளைப் பற்றி உலகமெங்கும் பேச்சாக இருந்தது. இவர்கள் இருவரையும் எவ்வளவோ பேர் கண்டித்தார்கள். அதில் முக்கியமானவர் அப்போதைய போப் ஆண்டவர். இவர்களின் லீலைகளை வெளியிடாத பத்திரிகைகளே இல்லை எனலாம். பல நாட்கள் இவர்களது கொட்டத்தைப் பற்றிதான், உலக பத்திரிகைகள் அனைத்தும் பத்தி பத்தியாக எழுதின. ஒரு கட்டத்தில் ரிச்சர்டு, எலிசபெத் இருவருமே தங்களது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்து விட்டு, திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களது திருமணம் 1964-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி நடந்தது.

அதன்பின்னர், இவர்கள் இருவரும் இணைந்து 11 திரைப்படங்களில் நடித்தார்கள். அதில் மிகவும் முக்கியமானவை, ‘கூ இஸ் அப்ரய்டு ஆப் வெர்ஜினியா வூல்ப்’ (Who’s Afraid of Virginia Woolf?), ‘தி டேமிங் ஆப் தி ஸ்ரவ்’ (The Taming of the Shrew). இந்த இரண்டு படங்களிலும் நடித்ததற்காக, இருவர் பெயருமே ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது கிடைத்தது என்னவோ, எலிசபெத் டெய்லருக்கு மட்டும்தான். இந்த தம்பதியர், தங்களது நடிப்புக்காக எவ்வளவோ மில்லியன் டாலர்களை சம்பளமாகப் பெற்றார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

எலிசபெத் டெய்லரை மணந்து கொண்டார் என்றாலும், ஏதாவது ஒரு பிரச்சினைக்காக இருவரும் சண்டையிட்டுக் கொள்ளாத நாளே இல்லை என்று சொல்லலாம். அவர்களின் பிரச்சினை முற்றிப்போனதில், 1970-ல் இருவரும் பிரிந்து போனார்கள். 1974-ம் ஆண்டு முறையாக விவாகரத்துப் பெற்றனர். ஆனால் அது சில நாட்களே நீடித்தது. 1975-ம் ஆண்டு இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். 1976-ம் ஆண்டு எலிசபெத் டெய்லரை மீண்டும் விவாகரத்து செய்த ரிச்சர்டு, மாடல் அழகியான சுசி ஹன்ட் என்பவரை மணந்துகொண்டார்.

ரா.வேங்கடசாமி