டீன் மார்டின்


டீன் மார்டின்
x
தினத்தந்தி 13 March 2020 4:15 PM IST (Updated: 13 March 2020 4:15 PM IST)
t-max-icont-min-icon

முதலில் பாடகராக இருந்து பின்னர் சிறந்த நகைச்சுவை நடிகராக உருமாறியவர், டீன் மார்டின். இவரது பெற்றோர், இத்தாலியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள். அவர்கள் அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஸ்டூபெவில்லி என்ற இடத்தில் வசித்தனர். அங்குதான் 1917-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி டீன் மார்டின் பிறந்தார்.

 டீன் மார்டினுக்கு பெற்றோர் வைத்த பெயர், டினோ பால் குரோஷெட்டி என்பதாகும். இவருக்கு ஒரே ஒரு சகோதரர் உண்டு.

இளம் வயதில் இருந்தே டீன் மார்டினுக்கு டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் பள்ளியிலும் அதையே விரும்பி, பொழுதுபோக்கும் விதமாக நிதானமாகப் பழகிக் கொண்டார். 10-வது படிக்கும்போது, ஒரு பிரச்சினை காரணமாக, அவர் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். அதன்பிறகு அவர் பல இடங்களில், பல வேலைகளைப் பார்த்தார்.

ஊர் விட்டு ஊர் மது பாட்டில்களைக் கடத்துவது, லாட்டரி டிக்கெட்டுகளை விற்பது, சூதாட்டக் கிளப்புகளில் உள்ள சில இடைத்தரகர்களுக்கு உதவியாளராகச் செயல்படுவது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகளையே இவர் அதிகம் செய்தார்.

சட்டத்திற்கு புறம்பான வேலைகளில், அவருக்கு தெரியாத வேலைகளை இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருந்தார். அப்போது அவருக்கு 17 வயதுதான். ஒரு கட்டத்தில் அவர் தன் ஊரின் அருகில் இருந்த இரவு விடுதிகளில், அவ்வப்போது பாட ஆரம்பித்தார். ‘எர்னி மேக்கே’ என்னும் பேண்டு குழுவில் இவர் பாடிக் கொண்டிருந்ததை, கிளிவ்லேண்ட் நகரைச் சேர்ந்த பேண்ட்லீடர் சேமி வாட்கிண்ஸ் என்பவர் கவனித்தார். அவர், தான் வைத்திருந்த பேண்ட் கோஷ்டியில் பாடல் பாடும் நபராக, டீன் மார்டினை நியமித்தார்.

இதனால் பல ஊர்களுக்கு பயணப்படும் வாய்ப்பு, மார்டினுக்கு கிடைத்தது. 1938- 1940 வருடத்தின் இடைப்பட்ட காலத்தில்தான், இவர் தனது பெயரை டீன் மார்டின் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு அதிர்ஷ்டம் அவரைத் தேடி வந்தது. எம்.சி.ஏ. என்னும் கம்பெனி, இவரை தன்னுடைய நிரந்தர பாடகராக ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதைத் தொடர்ந்து 1946-ம் ஆண்டு ரேடியோ புரோகிராம் ஒன்றில் தொடர்ந்து 15 நிமிடங்கள் பாட வேண்டும் என்று புதிய ஒப்பந்தம் கிடைத்தது. நியூயார்க் நகரில் இருந்து தொடர்ச்சியாக இவரது பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பிரபல ‘டைமண்ட் ரிகார்ட்ஸ்’ என்னும் கம்பெனிக்கு நான்கு பாடல்கள் பாட ஒப்பந்தம் ஆனார்.

1946-ம் வருடம் மார்டின் ஒரு நபரை சந்தித்தார். அது இவரது வாழ்க்கையில் மிக முக்கியமானது. அவர் சந்தித்த நபர், பின்னாளில் ஹாலிவுட்டை கலக்கிய நகைச்சுவை நடிகரான ஜெர்ரி லூயிஸ். ஒரு கிளப் கோஷ்டி நிகழ்ச்சியில், இருவரும் பங்கெடுத்திருந்தபோது, ஒருவருக்கொருவர் நகைச்சுவை நிறைந்த வசனங்களைப் பேசி மக்களைச் சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை என்.பி.சி. ஒலிபரப்பு கம்பெனி 30 நிமிடம் ஒலிபரப்பியது. இது மக்களால் அபரிமிதமாகப் பாராட்டப்பட்டது.

அதனால் இருவரும் ‘கோல்கேட் நகைச்சுவை நேரம்’ என்னும் டெலிவிஷன் நிகழ்ச்சியில், 1950-ம் வருடம் இணைந்து நடித்தனர். அதுவும் மக்களால் மிகவும் பிரமாதமாக ரசிக்கப்பட்டது. மார்டின்-லூயிஸ் என்னும் இந்த ஜோடி பிரபல நகைச்சுவை நடிகர்களாக கருதப்பட்டு, 1949-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை 16 படங்களில் சேர்ந்து நடித்து புகழ் பெற்றார்கள்.

நியூயார்க்கில் உள்ள பிரபல ‘கோபகபானா’ என்னும் மேடையில் 1954-ம் வருடம் ஜூலை 24-ந் தேதிதான் இவர்கள் கடைசியாக இணைந்து நடித்தது. 10 வருடங்கள் தொடர்ச்சியாக நடித்த பின் இவர்கள் பிரிந்து விட்டார்கள். படத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்னும் சிறு விஷயம்தான், இவர்களின் பிரிவுக்கு காரணம். மக்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவமாக இருந்தது. ஏனெனில் இவர்கள் இருவரும் பிரிவார்கள் என்று யாருமே நினைக்கவில்லை.

மார்டின் தனியாக வந்ததும், தனது பாடல் பாடும் தொழிலை தொடர்ச்சியாக மேற்கொண்டு, பல பிரபல பாடல்களை பாடி மக்களைக் கவனிக்க வைத்தார். அத்துடன் அழைப்பு வந்தால் படங்களிலும் நடித்தார். அதில், 1958-ம் ஆண்டு வெளியான ‘தி யங் லைன்ஸ்’ (The Young Lions) என்ற திரைப்படம் முக்கியமானது. அந்தப் படத்தில் மார்லன் பிராண்டோ, மான்ட்கோமரி கிளிப்ட் ஆகிய சிறந்த நடிகர்களுடன் நடித்தார்.

அதன்பிறகு மார்டின் தனக்கென ஒரு கோஷ்டி பாடகர்களைச் சேர்த்துக் கொண்டு, பல மேடைகளில் லாஸ் வேகாஸ் நகர்ப்புறங்களில் பாட ஆரம்பித்தார்.இவரதுகோஷ்டியில் முக்கியமானவர்கள், பிரான்க்சினிட்ரா, ஹேடுடேவிஸ் (ஜூனியர்), ஜோயிபிவுப், பீட்டர் லாபோர்டு போன்றவர்கள். இந்த கோஷ்டியின் மேடைப் பாட்டுகள் மிகவும் பிரபலமாகத் தொடங்கிய பின், இவர்களை பல படக் கம்பெனிகள் நடிக்க அழைத்தன.

டீன் மார்டின் நடித்த படங்களின் எண்ணிக்கை 51. அதில் மிகவும் முக்கியமான படங்களாகக் கருதப்படுவது, ‘சம் கேம் ரன்னிங்’ (Some Came Running). 1958-ல் வெளியான இந்தப் படத்தில் இவருடன் பிரபல நடிகை ஷர்லி மேக்லைன் மற்றும் பிராங் சினட்ரா ஆகியோர் நடித்திருந்தனர். 1960-ல் ஜூடி ஹாலிடே என்ற நடிகையுடன் இணைந்து, ‘பெல்ஸ் ஆர் ரிங்கிங்’ (Bells Are Ringing) என்ற படத்தில் நடித்தார்.

1962-ம் வருடமே மார்டின், கேபிட் ரிசார்ட்ஸ் என்னும் கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, ரீபிரைஸ் என்னும் கம்பெனியுடன் பாட ஒப்பந்தம் செய்து கொண்டார். இதில் இவர் கொடுத்த முதல் ரிசல்டே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எவ்ரிபடி லவ்ஸ் சம்படி (Everybody Loves Somebody) என்னும் அந்தப் பாட்டு, பீட்டில்ஸ் என்னும் பாட்டு கோஷ்டியின் பாடல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமெரிக்காவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி எல்லா நகரங்களிலும் ஒரு வாரம் தொடர்ந்தது.

இந்தப்பாட்டே பின்னால் மார்டின் நடித்த டெலிவிஷன் காட்சி களுக்கு ஆரம்பப் பாட்டாக இருந்தது. ‘தி டீன் மார்டின் ஷோ’ தொடர்ந்து 8 வருடங்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து ‘டீன் மார்டின் காமெடி நேரம்’ என்றொரு நிகழ்ச்சி ஒரு வருடம் நடந்தது. ஒரு குடிகாரன் வேடத்தில் தத்ரூபமாக டீன் மார்ட்டின் நடித்ததை பார்த்த மக்கள், அவர் பெரிய குடிகாரர் என்றே நம்பினார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்றாலும், மார்டினின் ஒரு வாசகம் எல்லோரையும் குழப்பிவிட்டது.

“குடிக்காதவர்களுக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். காலையில் எழுந்தவுடன் மாலை வரை நிதானத்தோடு இருப்பதுதான் அவர்கள் வேலை” - இதற்கு என்ன அர்த்தம் என்று மக்கள் தடுமாறினார்கள்.

மார்டின் அடுத்தடுத்து மூன்று பெண்களை மணந்து கொண்டார். இவர் களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் பிறந்தது. மூன்றாவது மனைவி கேத்ரீன் ஹான் என்பவருக்கு குழந்தை இல்லாததால், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார்கள்.

மார்டினின் மகன் டினோ, ஒரு விமான விபத்தில் இறந்தார் (1987). இதனால் டீன் மார்டின் மிகவும் கவலை யடைந்தார். 1988-89-ம் வருடம் இவருடன் பாடிய, ஹேமி டேவிஸ் ஜூனி யர், பிராங்க் சினட்ரா போன்ற வர் கள், அவரது உடல்நலக் குறைவை காரணம் காட்டி விலகிக் கொண்டனர். இதய நோயால் 1995-ம் வருடம் தனது 78- வயதில் கலிபோர்னியாவில் உயிர் நீத்தார்.

இவர் ஜெர்ரி லூயிசுடன் நடித்த நகைச்சுவை படங்களையும், இவரது குரல் வளம் மிகுந்த பாடல்களையும் மக்கள் இன்னும் மறக்கவே இல்லை என்பதுதான் அவர் விட்டுச்சென்ற ஞாபகச் சின்னங்கள்.

Next Story