நான் எதையும் இழக்கவில்லை - இர்பான்கான் பற்றி மனைவி சுதபா சிதார்


நான் எதையும் இழக்கவில்லை - இர்பான்கான் பற்றி மனைவி சுதபா சிதார்
x
தினத்தந்தி 1 May 2020 5:13 PM IST (Updated: 1 May 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

நான் எதையும் இழக்கவில்லை என இர்பான்கான் பற்றி மனைவி சுதபா சிதார் கூறியுள்ளார்.

மும்பை,

கடந்த சனிக்கிழமை இர்பான்கானின் தாய் சயீதா பேகம் (வயது 95) ஜெய்பூரில் உயிரிழந்தார். எனினும் ஊரடங்கு காரணமாக அவரால் தாயின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்தநிலையில் இர்பான்கானுக்கு 29- ம்தேதி திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பெருங்குடல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம் நடத்திய இர்பான்கான் 29-ம் தேதி மதியம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட புற்றுநோயால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரின் உயிர் பிரிந்தபோது அவர் மனைவி சுதபா, மகன்கள் பாபில், ஆயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவரது உடல் 29-ம் தேதி மாலை வெர்சோவா பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், அஜய்தேவ்கான், அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்களும், பிரியங்காசோப்ரா, அனுஷ்கா சர்மா, டாப்சி, குஷ்பூ உள்ளிட்ட பல நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சச்சின், ரோகித்சர்மா, ஷிகர்தவான் போன்ற விளையாட்டு வீரர்கள், லட்சக்கணக்கான இர்பான்கானின் ரசிகர்களும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கணவர் இர்பான்கான் பற்றி மனைவி சுதபா சிதார் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தான் தன் கணவரை அணைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவேற்றியுள்ள சுதபா, “நான் எதையும் இழக்கவில்லை, எல்லா வகையிலும் நான் பெற்றிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே சுதபாவும், இர்பான்கானும் காதலித்து வந்தனர். 1995-ஆம் ஆண்டு இருவரும் மணந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story