“நான் நலமாக இருக்கிறேன்” - நடிகர் நசுருதீன் ஷா


“நான் நலமாக இருக்கிறேன்” - நடிகர் நசுருதீன் ஷா
x
தினத்தந்தி 2 May 2020 10:17 AM IST (Updated: 2 May 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் நசுருதீன் ஷா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

சென்னை,

பிரபல இந்தி நடிகர்கள் இர்பான்கான், ரிஷி கபூர் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் நசுருதீன் ஷா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார் என்றும் கூறப்பட்டது. இது நடிகர்-நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் கவலையை பதிவிட்டு வந்தார்கள்.

ஆனால் தனது உடல் நிலை குறித்து பரவும் தகவலை நசுருதீன் ஷா மறுத்துள்ளார். முகநூல் பக்கத்தில், “நான் நலமாக உள்ளேன். கொரோனா ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டில் இருக்கிறேன். என் உடல் நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். எனது உடல் நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் நசுருதீன் ஷா மகன் விவான் ஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது தந்தை நலமுடன் இருக்கிறார். அவரது உடல் நிலை குறித்து வரும் தகவல்கள் பொய்யானவை” என்று கூறியுள்ளார்.

Next Story