நடிகர் பிரபாஸ் பண்ணை வீட்டை இடிக்க தடை


நடிகர் பிரபாஸ் பண்ணை வீட்டை இடிக்க தடை
x
தினத்தந்தி 4 May 2020 4:44 AM GMT (Updated: 4 May 2020 4:44 AM GMT)

நடிகர் பிரபாசின் பண்ணை விட்டை இடிக்க கூடாது என்று தடை விதித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் நடித்த ‘பாகுபலி’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இவருக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தனர். பிரபாசுக்கு தெலுங்கானாவில் ராய்துர்கா பகுதியில் உள்ள பன்மத்தா கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. இந்த நிலையில் தெலுங்கனா அரசு பிரபாஸ் பண்ணை வீட்டை உள்ளடக்கிய 84 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று அறிவித்தது. அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து பிரபாஸ் பண்ணை வீட்டையும் இடிக்க அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதற்கு பிரபாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

பண்ணை வீட்டுக்கான நிலத்தை நேர்மையான முறையில் வாங்கினேன் என்றும், அதனை இடிக்க கூடாது என்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்தது. பிரபாஸ் வக்கீல், பல வருடங்களுக்கு முன்பு ரூ.1.05 கோடி கொடுத்து நிலத்தை வாங்கியதற்கான ஆவணத்தையும் சமர்ப்பித்தார். வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகர் பிரபாசின் பண்ணை விட்டை இடிக்க கூடாது என்று தடை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.

Next Story