ஹரியின் ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடி ராஷி கன்னா
ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதற்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
சென்னை,
சூர்யா, சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி உள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். கொரோனாவால் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். இந்த படத்துக்கு பிறகு ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதற்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. இப்போது 6-வது முறை இணைந்துள்ளனர். சூர்யாவுக்கு இது 39-வது படம் ஆகும். ‘அருவா’ படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். இதனை அவரே தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ராஷி கன்னா ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது உங்கள் அடுத்த படங்கள் என்ன? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து ராஷி கன்னா கூறும்போது, “அரண்மனை 3-ம் பாகத்திலும், சூர்யா-ஹரி கூட்டணியில் தயாராகும் படத்திலும் நடிக்கிறேன். தெலுங்கிலும் 2 படங்கள் உள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு அந்த படங்கள் பற்றிய விவரம் தெரியவரும்” என்றார். ராஷி கன்னா ஏற்கனவே தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Related Tags :
Next Story