சினிமா பணிகளை தொடங்க அனுமதி வேண்டும் அரசுக்கு, பட அதிபர்கள் கோரிக்கை


சினிமா பணிகளை தொடங்க அனுமதி வேண்டும் அரசுக்கு, பட அதிபர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 10:55 AM IST (Updated: 5 May 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட சினிமா பணிகளை தொடங்க அனுமதி வேண்டும் என அரசுக்கு, பட அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தயாரிப்பாளர்களாக உள்ள இயக்குனர் பாரதிராஜா, நடிகர்கள் ராதாரவி, மனோபாலா, விஷ்ணு விஷால் மற்றும் தாணு, டி.ஜி.தியாகராஜன், கேயார், கே.முரளிதரன், டி.சிவா, தனஞ்செயன், திருமலை, கே.எஸ்.சீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், கே.ராஜன், ஞானவேல் ராஜா, எச்.முரளி, பெப்சி சிவா உள்பட பலர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் இதனால் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கி, 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இருப்பதால், படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை, ஒலிக்கலவை, டி.ஐ, உள்ளிட்ட போஸ்ட்புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும்.

கேரள அரசாங்கம் இந்த பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. போஸ்ட்புரொடக்சன் பணிகளை நாங்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்தும், மத்திய- மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்”.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் தயாரிப்பாளர்கள் நேரில் மனு அளித்தனர்.

இதேபோல் சின்னத்திரையில் தயாரிப்புக்கு பின் உள்ள தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு சின்னத்திரை சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச்செயலாளர் குஷ்பு ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

Next Story