மதுக்கடைகள் திறக்க வைரமுத்து, கஸ்தூரி எதிர்ப்பு


மதுக்கடைகள் திறக்க வைரமுத்து, கஸ்தூரி எதிர்ப்பு
x

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.

“மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு. மனைவிக்கு சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை. ஆனால் என்ன பண்ணும் என் தமிழ் மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?” என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு செய்வது தவறு. நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள். குடி, கொரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு வட மாநிலங்களில் மதுபான கடைகள் முன்னால் ஏராளமானோர் திரண்டு மதுபானங்கள் வாங்கி குவித்த வீடியோவை பார்த்துவிட்டு வெளியிட்ட பதிவில் “இந்த வீடியோக்களை பார்க்கும்போது, எல்லா மதுபான கடைகளும் இன்றுமுதல் கொரோனாவை பரிமாறப்போகிறது என்று உணர்கிறேன். நிறைய பேர் வாங்கி இருப்பு வைத்து விட்டதாக சொல்வார்கள். ஏழைகள் என்ன செய்வார்கள். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆகிவிட்டது. பாதுகாப்பு முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Next Story