நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் - இயக்குனர் பாரதிராஜா விளக்கம்
நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் என இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சிவப்பு மண்டல பகுதியான சென்னையில் இருந்து, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். அவருடன் உதவியாளர்கள் 3 பேரும் சென்றுள்ளனர்.
இதையடுத்து இயக்குனர் பாரதிராஜா நேற்று முன்தினம் தானாக முன்வந்து தேனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, தான் சென்னையில் இருந்து தேனி வந்த விவரத்தை தெரிவித்தார். இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
மேலும் அவருடைய உதவியாளர்கள் 3 பேருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் இயக்குனர் பாரதிராஜா உள்பட 4 பேரும் வீட்டில் 28 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா உள்பட 4 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவருடைய வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை தேனி அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
இந்தநிலையில், சென்னையிலிருந்து தேனி சென்ற இயக்குநர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பாரதிராஜ வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:
பாரதிராஜா, தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நடந்தது என்ன? என் சகோதரி தேனியில் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதிச்சீட்டு வாங்கி, பல மாவட்டங்களைக் கடந்து வந்து என் சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சையில் இருக்கிறார். நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்ததால் தேனி நகராட்சி சுகாதார அமைப்பிடம் பேசி, தற்காப்புக்காக என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள் என்றேன். மூன்று முறை பரிசோதனைகள் செய்தார்கள். சென்னையில் முதலில் பரிசோதனை செய்தார்கள். பிறகு வழியில் ஆண்டிபட்டியிலும் இப்போது தேனியிலும் பரிசோதனை செய்ததில் மூன்றிலும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்தன. என்னுடன் அழைத்து வந்த உதவியாளர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் உள்ளோம். எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். இதுதான் நடந்த உண்மை. எனது உதவியாளர்களுடன் இணைந்து அடுத்த படத்தின் கதைக்கான விவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் என பாரதிராஜா கூறி உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது.
#StaySafeStayHome#COVID19pic.twitter.com/GBEp4QcXMm
— Bharathiraja (@offBharathiraja) May 6, 2020
Related Tags :
Next Story