விண்வெளியில் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்


விண்வெளியில் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்
x
தினத்தந்தி 7 May 2020 12:54 PM IST (Updated: 7 May 2020 3:22 PM IST)
t-max-icont-min-icon

ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் விண்வெளியில் நடத்த இருப்பதை நாசா உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நியூயார்க்,

பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ டாம் குரூஸ். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

டாப் கன், காக்டெய்ல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 3டி, த லாஸ்ட் சாமுராய், எட்ஜ் ஆப் டுமாரோ உட்பட இவரது பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவை.  

ஆஸ்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள இவர், கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை பெற்றவர். ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள், த லாஸ்ட் சாமுராய் உட்பட பல படங்களை தயாரித்தும் உள்ளார். சில படங்களின் ஷூட்டிங்கின் போது காயமடைந்தும் உள்ளார்.

இந்நிலையில் இவர் தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை விண்வெளியில் நடத்த இருப்பதாகவும் இதுபற்றி அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனர் எலன் மஸ்க் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்கத்  டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 'நாசா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இது அதிரடி கலந்த ஆக்‌ஷன் படமாகவும் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை நாசா நிர்வாகி, 'விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை என்று தெரிவித்துள்ளார். 

Next Story