மதுக்கடைகள் திறப்பு தங்கர் பச்சான், சேரன் எதிர்ப்பு


மதுக்கடைகள் திறப்பு தங்கர் பச்சான், சேரன் எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 May 2020 10:19 AM IST (Updated: 8 May 2020 10:19 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகள் திறப்பிற்கு தங்கர் பச்சான், சேரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோயம்பேடு காய் கனி வளாகம் கொரோனா தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டதை கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கிறோம். இந்தநிலையில் மதுக்கடைகளை திறப்பதால் பதற்றம் மேலும் அதிகமாகிறது. இதிலிருந்து மீண்டு விட 43 நாட்கள் குடிக்காமல்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசால் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. மீதம் இருப்பவர்களுக்கும் மதுக்கடைகள் கிருமியை கொண்டு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

வருமானம் இல்லாமல்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்பது ஏற்புடையது அல்ல. தாய்மார்களை, பிள்ளைகளை, முதியோரை குடிநோயாளிகள் அடித்து துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும். அனைத்து அரசியல் கட்சியினரும் இணைந்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

டைரக்டர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். இதை விட மதுவிலக்கு அமல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக இது பெரும் ஆயுதமாக மாறியிருக்கும். அரசுக்கான வருமானம் என்பதை விட பெரும்பாலான மக்களின் உயிர் காப்பதல்லவா முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Next Story