மதுக்கடையில் பெண்கள் ‘கியூ’ நடிகை மனிஷா யாதவ் கருத்து


மதுக்கடையில் பெண்கள் ‘கியூ’ நடிகை மனிஷா யாதவ் கருத்து
x
தினத்தந்தி 8 May 2020 4:54 AM GMT (Updated: 8 May 2020 4:54 AM GMT)

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்கவும், குடிக்கவும் உரிமை இருக்கிறது என நடிகை மனிஷா யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா ஊரடங்கை தளர்த்தி உள்ள பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது. பெண்களும் மது வாங்க திரண்டனர். கர்நாடகாவில் உள்ள மதுக்கடை முன்னால் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனி கியூவை உருவாக்கி இருந்தனர். மதுக்கடை முன்னால் பெண்கள் கியூவில் நின்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதனை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா விமர்சித்து, “மதுபான கடைகள் முன்னால் யார் நிற்கிறார்கள் பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்” என்று கேலி செய்தார். அவரை கண்டித்த இந்தி பாடகி சோனா மொகபத்ரா “ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்கவும், குடிக்கவும் உரிமை இருக்கிறது” என்றார்.

இந்த நிலையில் தமிழில் வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், சென்னை-28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மனிஷா யாதவும் மதுக்கடை முன்னால் பெண்கள் கியூவில் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “இதற்கு முன்னால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு அது சரியாக கடைப்பிடிக்கப்படுகிறது. மதுக்கடைகளுக்கு வெளியே பெண்களும், ஆண்களும் தனித்தனி வரிசையில் நிற்பதை பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story