இயக்குநர் ஹரி அருவா படத்தில் 25% சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கொரோனா பாதிப்பால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் வலியைப் பகிர்ந்துகொள்ள பிரபலங்கள் சிலர் முன்வந்துள்ளார்கள். ஒவ்வொரு படத்திலும் ரூ. 1 கோடி அளவில் தான் நடித்து வரும் மூன்று படங்களில் தனக்கு வழங்கப்படும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. இதற்குப் பாராட்டு தெரிவித்த இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், தானும் இதைப் பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர், ஹரியும் தன்னுடைய சம்பளத்தைக் 25% குறைத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஹரி பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் திரையுலகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. நம் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைமைக்குத் திரும்பும். இந்தச் சூழலை மனத்தில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கும் அருவா படத்தில் என்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் 39-வது படம், அருவா. ஹரி இயக்கவுள்ள 16-வது படம். வேல், ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணி 6-வது தடவையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.