மராட்டியத்தில் தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறிய விபத்து: அலட்சியத்தின் உச்சம் இது - அனேகன் பட நடிகை


மராட்டியத்தில் தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறிய விபத்து: அலட்சியத்தின் உச்சம் இது -  அனேகன் பட நடிகை
x
தினத்தந்தி 9 May 2020 6:48 AM GMT (Updated: 9 May 2020 6:48 AM GMT)

மராட்டியத்தில் தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறிய விபத்து அலட்சியத்தின் உச்சம் இது என அனேகன் பட நடிகை கூறியுள்ளார்.

மும்பை,

ரெயில், பஸ்களில் செல்ல வாய்ப்பு கிடைக்காத அல்லது அதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாத ஏராளமான தொழிலாளர்கள் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் சைக்கிளிலும், நடைப்பயணமாகவும் குடும்பத்துடன் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் நடைப்பயணமாக சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் ஜல்னாவில் இருந்து புறப்பட்டனர். சாலை வழியாக சென்றால் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என பயந்த அவர்கள், தண்டவாளம் வழியாக நடையை கட்டினர். இரவு முழுவதும் சுமார் 50 கி.மீ.க்கு மேல் நடந்த அவர்கள் அதிகாலை நேரத்தில் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் பகுதியில் உள்ள கட்கேஜல்காவ் கிராம பகுதியை அடைந்தனர்.

நீண்ட தூரம் நடந்ததால் சோர்வடைந்த தொழிலாளர்கள் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடைபயணத்தை தொடங்க முடிவு செய்தனர். ஊரடங்கால் ரெயில் எதுவும் வராது என நினைத்து தண்டவாளத்திலேயே படுத்து விட்டனர். 4 பேர் மட்டும் தண்டவாளத்துக்கு சற்று அருகில் படுத்து தூங்கினர்.

இந்தநிலையில் நாந்தெட்டில் இருந்து நாசிக் அருகே உள்ள மன்மாட் நோக்கி பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றிச் செல்லும் காலியான சரக்கு ரெயில் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்தது. அதிகாலை 5.15 மணியளவில் அந்த சரக்கு ரெயில் தொழிலாளர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பகுதியை நெருங்கியது.

ரெயில் வரும் சத்தம் கேட்டு தண்டவாளம் அருகே படுத்து தூங்கிய 4 பேரில் 3 பேர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் மற்றவர்களை எழுப்ப முயற்சித்தனர்.

இதற்கிடையே தண்டவாளத்தில் மனிதர்கள் படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், அவசர பிரேக்கை அழுத்தி ரெயிலை உடனடியாக நிறுத்த முயற்சித்தார். ஆனால் பலன் இல்லை. தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது ரெயில் ஏறியது. சிறிது தூரம் சென்ற பிறகுதான் ரெயில் நின்றது.

நெஞ்சை பதற வைக்கும் இந்த துயர சம்பவத்தில் 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி ஆனார்கள்.

 இந்ந்தநிலையில்,  தமிழில் ‘அனேகன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமைரா நடித்திருந்தார். இந்தநிலையில், டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

இது நடந்திருக்கக் கூடாது. அலட்சியத்தின் உச்சம் இது. மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, எந்த ஒரு திட்டமும் இன்றி அமல்படுத்தப்பட்டது. பாதித்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story