சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நான் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் என நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
சென்னை,
கொரோனாவால் சினிமா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிப்பை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள, தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர். இதுபோல் தமிழ் நடிகர்களும் சம்பளத்தை குறைக்க வற்புறுத்தப்பட்டது. அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி தனது புதிய படங்களுக்கான சம்பளத்தில் ரூ.3 கோடியை குறைப்பதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து இளம் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணும் சம்பளத்தை குறைத்துள்ளார். இதுபோல் பிரபல டைரக்டர் ஹரியும் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆர்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
கடினமான இந்தக் கொரோனா காலத்தை அனைவரும் கடந்து வந்துகொண்டே இருக்கிறோம். கூடிய விரைவில் இந்த நிலை மாறும் என நம்புகிறேன். சினிமா என்பது பொதுமக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு. ஆனால், இந்த சினிமாவையே நம்பியிருக்கும் பல்லாயிரம் குடும்பங்களுக்கு, சினிமாதான் வாழ்வாதாரமே. இந்த சினிமா நல்லாயிருக்க வேண்டும் என்று தான் நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், உதயா மற்றும் இயக்குநர் ஹரி சார் வரைக்கும் அவர்களுடைய சம்பளத்தை 25% தொடங்கி 40% வரை குறைத்துள்ளனர். ரொம்ப நல்ல விஷயம். மிக்க நன்றி.
நான் பெரிய பிள்ளையாருக்கு முன்பு சின்ன எலிதான். என் மனதுக்குப் பட்டதை அனைவரது ஆசீர்வாதத்துடன் செய்யலாம் என்று இருக்கிறேன். என்னவென்றால், அடுத்த ஒரு வருடத்துக்கு நான் நடிக்கப் போகும் ஒவ்வொரு படத்திலிருந்தும் என் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே பெறவுள்ளேன். இதற்கு ஒரு காரணம் உள்ளது. என்னவென்றால், சினிமா எப்படியிருக்கும் என யாருக்குமே தெரியாது.
இந்த சினிமாவை நம்பி முதலீடு போடும் அனைத்து தயாரிப்பாளர்களுமே நம்முடைய முதலாளி. அவர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே, நாம் அனைவரும் நன்றாக இருப்போம். ஹார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும், 15 நாட்கள் கால்ஷீட் வேண்டும். ஆனால் அவருடைய சம்பளம் பெரியதாச்சே என்று எந்தவொரு இயக்குநரும் யோசிக்கவே வேண்டாம். ஏனென்றால் நான் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்கவுள்ளேன். எந்த கண்டிஷனும் கிடையவே கிடையாது.
ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் உள்ளது. நான் நடிக்கும் படங்களில் இயக்குநர் ஒரு காட்சியைத் திட்டமிடலாம். அந்தக் காட்சிக்கு 10 துணை நடிகர்கள் அல்லது நாடக நடிகர்கள் தேவைப்படும் பட்சத்தில், அதில் கூடுதலாக 10 நடிகர்களுக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும். ஹார்த்தி நடித்தால் இவ்வளவு சம்பளம் என்று ஒரு பட்ஜெட் வைத்திருப்பீர்கள். நான் வாங்கப்போவது ஒரு ரூபாய் தானே. அந்த மீதிப் பணத்தில் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுத்தீர்கள் என்றால் ரொம்பவே சந்தோஷம்.
ஏனென்றால், நமது கலைஞர்கள் அரிசி, பருப்பு கிடைக்குது, சாப்பிட்டுவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பவர்களே கிடையாது. அவர்கள் தினமும் உழைத்துச் சம்பாதித்துக் கிடைக்கும் பணத்தில் வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வார்கள். தன்மானத்துடன் வாழ்வார்கள். அதுமட்டுமன்றி, நீங்கள் திட்டமிடும் காட்சியும் பிரம்மாண்டமாக மாறும். இதன் மொத்தப் புண்ணியமும் நமது முதலாளிகளையே சேரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நான் விரும்பும் என் மரியாதைக்குரிய திரைத்துறைக்கு என்னால் முடிந்தது🤗💐🙏
— Actress Harathi (@harathi_hahaha) May 9, 2020
உங்களை மகிழ்விப்பதே என் மகிழ்ச்சி 💪🤩🙌
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை வேண்டும் 😍👍🙏#spreadinglove#sacrifice#HelpingHands#cinema#love#producer#director#actorpic.twitter.com/j00sWOxZ4d
Related Tags :
Next Story