ஊரடங்கு பிரச்சினையால் பாதிப்பு “சினிமாவுக்கு இன்னொரு பெரிய சவால்” பட அதிபர் கேயார் பேட்டி
தியேட்டர் அதிபர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள்.
சென்னை,
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினை திரையுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த மாதமே திரைக்கு வரவிருந்த படங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த படங்களின் தயாரிப்பாளர்கள், வாங்கிய கடனுக்கு மேலும் மேலும் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தியேட்டர் அதிபர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சினிமா உலகமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஊரடங்கு நிலை வாபசானால், இந்த பாதிப்பு நீங்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதுபற்றி பட அதிபர், டைரக்டர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கேயார் கூறியதாவது:-
“ஊரடங்கு சட்டம் வாபஸ் ஆன பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய அளவில் வசூல் ஆகாது. தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வர பயப்படுவார்கள். அவர்களுக்கு முழுமையாக பயம் நீங்குவதற்கு ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள். தியேட்டர்களில் வசூல் குறைந்தால், அது தயாரிப்பாளர்களையும் பாதிக்கும்.
உதாரணத்துக்கு, ரூ.75 கோடி வசூல் செய்யும் ஒரு பெரிய கதாநாயகனின் படம், ரூ.45 கோடிதான் வசூல் செய்யும். தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்கும் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இணையதளங்களில் படம் பார்ப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். சினிமா, இன்னொரு பெரிய சவாலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது”.
இவ்வாறு கேயார் கூறினார்.
Related Tags :
Next Story