வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்? ஷில்பா ஷெட்டி விளக்கம்
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்? ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. விஜய்யின் குஷி படத்தில் ‘மெக்கொரீனா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கும் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. 2012-ல் ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி-ராஜ்குந்த்ரா தம்பதியினர் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வாடகைத் தாய் மூலம் இரண்டாவது பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதற்கான காரணத்தை ஷில்பா ஷெட்டி தற்போது முதல்முறையாக வெளியிட்டு உள்ளார். அவர் கூறியதாவது:-
“என் மகனுக்கு சகோதர உறவோடு இன்னொரு குழந்தை இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள தயாரானேன். ஆனால் இரண்டுமுறை நான் கருத்தரித்தும் எனக்கிருந்த ஆரோக்கிய குறைபாடினால் கருச்சிதைவு ஏற்பட்டது. மீண்டும் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று யோசித்தேன். அதுவும் அமையவில்லை. இதைத்தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன்”.
இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story