தியேட்டர்களுக்கு பதில் ஜோதிகா,அமிதாபச்சன் படங்கள் இணையதளத்தில் ரிலீஸ்
தியேட்டர்களுக்கு பதில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், அமிதாபச்சன் படங்கள் இணையதளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக மே 29-ம் தேதி இணையதளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இதுபோல் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்களையும் இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்பட்டது. பரமபதம் விளையாட்டு படத்துக்கு குறைவான தியேட்டர்களை ஒதுக்கியதால் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பென்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்திலேயே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் நேரடியாக ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிதாபோ திரைப்படம் என மொத்தம் 7 திரைப்படங்கள் வரும் மாதங்களில் நேரடியாக அமேசானில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படங்கள் அனைத்தையும் மே முதல் ஜூலை வரை ஸ்ட்ரீம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.
தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஆன்லைன் தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story